என் மலர்
இந்தியா

ராகுல் காந்தி மீது எப்.ஐ.ஆர். பதிவு.. டெல்லி காவல் துறை நடவடிக்கை
- ராகுல் காந்தி மீது டெல்லி போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.
- ராகுல் காந்தியை போலீசார் விசாரணைக்கு அழைக்க வாய்ப்பு.
பாராளுமன்ற வளாகத்தில் நடந்த அமளியின் போது உடல் ரீதியாகத் தாக்கப்பட்டதாக குற்றம்சாட்டி பா.ஜ.க. புகார் அளித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீது டெல்லி போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.
அதன்படி ராகுல் காந்தி மீது சட்டப்பிரிவு 115 (தன்னிச்சையாக காயப்படுத்துதல்), 117 (தன்னிச்சையாக கடுமையான காயத்தை ஏற்படுத்துதல்), 125 (மற்றவர்களின் உயிருக்கு அல்லது தனிப்பட்ட பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படுத்துவது), 131 (குற்ற சக்தியைப் பயன்படுத்துதல்), 351 ஆகியவற்றின் கீழ் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை அதிகாரி தெரிவித்தார்.
இந்த வழக்கு தொடர்பாக ராகுல் காந்தியை போலீசார் விசாரணைக்கு அழைக்க வாய்ப்புள்ளதாக அந்த அதிகாரி கூறியுள்ளார். சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வழங்குமாறு மக்களவைச் செயலகத்திடம் போலீசார் கோரிக்கை விடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சிசிடிவி வீடியோ காட்சிகளை ஆய்வு செய்து, இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை மேற்கொள்ள காவல் துறையினர் திட்டமிடுவதாக கூறப்படுகிறது.
ராகுல் காந்திக்கு எதிராக பதியப்பட்ட அனைத்து சட்டப் பிரிவுகளும் ஜாமீன் பெறக்கூடியவை, பிரிவு 117 தவிர, அதற்கான தண்டனை காயத்தின் தீவிரத்தைப் பொறுத்தது, ஏழு ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படலாம் என்று டெல்லி காவல் துறையை சேர்ந்த மற்றொரு அதிகாரி தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் அமித் ஷா பாபாசாகேப் அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் உரையாற்றியதை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியினர் சார்பில் நாடு தழுவிய போராட்டங்கள் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
மேலும், இந்த விவகாரம் குறித்து பாராளுமன்ற வளாகத்தில் எம்.பி.க்கள் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக பா.ஜ.க. எம்.பி.க்கள் காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக பா.ஜ.க. எம்.பி.க்கள் அளித்த புகாரின் பேரில் தான் டெல்லி காவல் துறையினர் ராகுல் காந்திக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.
பா.ஜ.க. எம்.பி.க்கள் தங்கள் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவை தள்ளிவிட்டு ராகுல் காந்தியை உடல்ரீதியாக தாக்கியதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது. இது தொடர்பாக திக்விஜய சிங், முகுல் வாஸ்னிக், ராஜீவ் சுக்லா மற்றும் பிரமோத் திவாரி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் அடங்கிய குழு காவல் நிலையத்திற்கு நேரில் சென்று புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.






