மகளிர் இடஒதுக்கீடு மசோதாவால் புதிய அத்தியாயம் தொடங்க உள்ளது - பிரதமர் மோடி

ஜனநாயக கட்டமைப்புகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டியதன் அவசியத்தினை பல வருடங்களாக அனைவரும் உணர்ந்து வருகின்றனர்.
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவால் புதிய அத்தியாயம் தொடங்க உள்ளது - பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி:

பாராளு​மன்​றம் மற்​றும் சட்​டசபை​களில் 2029-ம் ஆண்டு முதல் 33 சதவீதம் மகளிர் இடஒதுக்​கீட்டை நடை​முறைப்​படுத்​த​வும், மகளிருக்கு 273 இடங்​களை ஒதுக்​கும் வகை​யில் மொத்த பாராளுமன்ற மக்​கள​வைத் தொகு​தி​களின் எண்​ணிக்​கையை 816 ஆக உயர்த்​த​வும் வழி​வகுக்​கும் வரைவு மசோ​தாக்​களுக்கு மத்​திய அரசு கடந்த 8-ந்தேதி ஒப்​புதல் வழங்​கியது.

இந்த மசோ​தாவுக்கு ஒப்​புதல் வழங்க வருகிற 16-ந் தேதி முதல் 18-ந்தேதி வரை பாராளுமன்​ற சிறப்பு கூட்​டத்தை மத்​திய அரசு கூட்டி​யுள்​ளது.

மேற்கு வங்​காளம், தமிழ்​நாடு, அசாம், கேரளா, புதுச்​சேரி ஆகிய​ மாநில சட்டசபை தேர்​தல்​களில் வெற்றி பெறவே மகளிர் இடஒதுக்​கீடு சட்​டம் மற்​றும் தொகுதி மறு வரையறை தொடர்​பான மசோ​தாக்​களை நிறைவேற்​று​வதற்​காக மத்​திய அரசு பாராளுமன்​றத்​தின் சிறப்பு கூட்​டத்​தை கூட்டி உள்​ள​தாக காங்​கிரஸ் குற்​றம்​சாட்டி இருந்தது.

இதற்கிடையே மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்தும் நேரம் வந்து விட்டது என்று மக்களவை, மேல்சபை கட்சி தலைவர்களுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார்.

இந்த நிலையில் டெல்லியில் இன்று நடந்த மகளிர் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று பேசியதாவது:-

நாட்டின் வளர்ச்சி பயணத்தில் 21-ம் நூற்றாண்டின் முக்கியமான முடிவுகளில் ஒன்றை நாடு தற்போது எடுக்க இருக்கிறது. இந்த முடிவு பெண் சக்திக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும், மகளிர் இடஒதுக்கீடு மசோதா 21-ம் நூற்றாண்டின் மிக முக்கியமான முடிவுகளில் ஒன்றாகும்.

பெண் சக்தியை போற்றுவதற்கு இது அர்ப்பணிக்கப்பட்டதாகும். நமது பாராளுமன்றம் ஒரு புதிய வரலாற்றை படைக்கும் தருவாயில் உள்ளது. கடந்த கால கோட்பாடுகளை நனவாக்கும் ஒரு புதிய வரலாறு ஆகும்.

மாநில சட்டசபை முதல் பாராளுமன்றம் வரை நீடித்த காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் வந்து விட்டது. அந்த நாட்கள் வருகிற 16, 17, 18-ந்தேதி ஆகும். பெண்களுக்கான இடஒதுக்கீடு சட்டம் என்பது சமத்துவமிக்க இந்தியாவை உருவாக்குவ தற்கான உறுதியாகும்.

மகளிர் இடஒதுக்கீடு மசோதாக்கள் மூலம் இந்தியாவில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்க உள்ளது. இந்த நூற்றாண்டின் மிக சிறந்த தருணம் என்றால் அது பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்ததுதான்.

இந்தியாவில் சமூக நீதி என்பது ஒரு முழக்கமாக மட்டும் இல்லாமல் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். நமது நாட்டின் பஞ்சாயத்துராஜ் அமைப்புகள் பெண்களின் தலைமைத்துவத்திற்கு ஒரு சிறந்த உதாரணமாக திகழ்கின்றன.

நான் இங்கு யாருக்கும் போதனை செய்யவோ, யாரையும் தட்டி எழுப்பவோ வரவில்லை. மாறாக இந்த நாட்டில் பெண்களின் ஆசியை பெறவே நான் இங்கு வந்துள்ளேன். பெண்களுக்கு அளப்பறிய பங்களிப்புகளை இந்தியா வழங்கி உள்ளது.

ஜனநாயக கட்டமைப்புகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டியதன் அவசியத்தினை பல வருடங்களாக அனைவரும் உணர்ந்து வருகின்றனர். இதற்கான விவாதம் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

2023-ம் ஆண்டு பெண்கள் இடஒதுக்கீடு சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது அது அனைத்து கட்சிகளாலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 2029-ம் ஆண்டுக்குள் பெண்களுக்கான இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலுவாக வலியுறுத்தின. இந்த முறை கொண்டு வரப்பட்டுள்ள சட்டதிருத்த மசோதாவானது விவாதம், ஒத்துழைப்பு மற்றும் பங்கேற்பின் மூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே எங்களின் முயற்சியும், முன்னுரிமையும் ஆகும்.

முடிவு எடுக்கும் செயல் முறைகளில் பெண்களின் பங்கேற்பு அதிகரிப்பது, அமைப்புகளுக்குள் அதிக உணர்திறனையும், துரித செயல்பாட்டையும் ஏற்படுத்துகிறது என்று ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

அனைவரின் கூட்டு முயற்சியால் இந்த அவையின் கண்ணியம் புதிய உயரங்களை எட்டும். ஒவ்வொரு கட்சியும் அரசியலுக்கு அப்பாற்பட்டு பெண்களின் நலனுக்காக இந்த முக்கிய பணியை மேற்கொண்டுள்ளது கண்டு நாட்டின் ஒவ்வொரு பெண்களும் மகிழ்ச்சி அடைவார்கள்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com