

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23-ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெற உள்ளது.
வரும் 21-ம் தேதி மாலை வரை மட்டுமே பிரசாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக சட்டசபைத் தேர்தலை ரத்து செய்யக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழ்நாட்டில் கட்சிகள் பணம், வாக்காளர்களுக்கு இலவசம் அறிவித்து வாக்குகள் கேட்கப்பட்டு வருகின்றன. அரசியல் சாசன விதிகளுக்கு மட்டுமல்லாமல் தேர்தல் நடத்தை விதிகளுக்கும் இது எதிரானது. வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் வரையில் தமிழக சட்டசபை தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும். இதுகுறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் திங்கட்கிழமை அவசர வழக்காக பட்டியலிடப்பட்டு சுப்ரீம் கோர்ட் இதனை விசாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.