

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் பவன் கல்யாண். ஜன சேனா கட்சித் தலைவரான இவர் தெலுங்கு தேச கட்சியுடன் என்டிஏ கூட்டணியில் இடம்பெற்று தேர்தலில் வென்று ஆந்திர துணை முதல்வராக உள்ளார்.
அண்மையில் தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலில் வென்று உச்ச நட்சத்திரமாக விஜயின் தவெக கட்சி ஆட்சி அமைத்தது. கட்சி ஆரம்பித்த 2 வருடத்தில் கிடைத்த வெற்றி இது.
இந்நிலையில் விஜய்யுடன் தன்னை ஒப்பிடுவது தவறானது என பவன் கல்யாண் பேசியுள்ளார்.
மங்களகிரியில் உள்ள ஜனசேனா கட்சியின் தலைமையகத்தில் தொண்டர்களிடையே உரையாற்றிய அவர், "தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் வெளியாகி, விஜய் முதலமைச்சரானதில் இருந்தே மக்கள் என் மீது கடுமையான அழுத்தத்தை கொடுத்து வருகின்றனர்.
அண்டை மாநிலத்தில் ஒரு நடிகர் கட்சி தொடங்கி தனித்து போட்டியிட்டு முதலமைச்சராகிவிட்டார், உங்கள் கட்சியும் ஆந்திராவில் தனித்து போட்டியிட்டு நீங்களும் முதல்வர் ஆகியிருக்க வேண்டும் என்று பலரும் எனக்கு தொடர்ந்து குறுஞ்செய்திகளை அனுப்பி வருகின்றனர்" என்றார்.
தொடர்ந்து பேசுகையில் தெலுங்கு பழமொழி ஒன்றை சுட்டிக்காட்டிய பவன், "இது எப்படி இருக்கிறது என்றால், அடுத்த வீட்டுத் திருமணத்திற்காக அந்த வீட்டுக்கு சம்மந்தமே இல்லாத சிறுவர், சிறுமிகள் உற்சாகமடைவதை போல இருக்கிறது.
ஆந்திரப் பிரதேசத்தின் அரசியல் சூழல் முற்றிலும் மாறுபட்டது. கடந்த 2019 தேர்தலில் நான் தனித்துப் போட்டியிட்ட போது இதே மக்கள் என்ன செய்தார்கள்? அமைச்சர்கள் உட்பட யாரும் கூட என்னுடன் நிற்கவில்லை" என்றார்.