

உலகம் போட்டி நிறைந்ததாக மாறி உள்ளது. தேர்வுகளில் 90 சதவீதம் மதிப்பெண் எடுத்தால் கூட தனது பிள்ளையை கூடுதல் மதிப்பெண் எடுத்தவர்களுடன் ஒப்பிட்டு பெற்றோர் வருத்தமடைகின்றனர். இந்தநிலையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 55 சதவீதம் மதிப்பெண் எடுத்த மகனின் பெற்றோர் கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் மும்பையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மும்பையை சேர்ந்தவர் வாசிம் பட்டேல். இவரது மகன் முகமது சையது. சமீபத்தில் நடந்த 10-ம் வகுப்பு தேர்வில் முகமது சையது 55 சதவீதம் மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றார். மற்றவர்களை பொறுத்தவரை இது குறைந்த மதிப்பெண் தான். எந்த ஒரு பெற்றோரும் இந்த மதிப்பெண் எடுத்த பிள்ளை மீது வருத்தத்தில் தான் இருப்பார்கள். ஆனால் வாசிம் பட்டேல் மற்றும் அவரது மனைவி மகனின் தேர்ச்சியை கேக் வெட்டி கொண்டாடினர்.
இதுதொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. அந்த கேக்கில் மாணவனின் மதிப்பெண் பட்டியல் இடம்பெற்று இருந்தது.
கேக் வெட்டும் வீடியோவை தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்ட மாணவனின் தந்தை "என்னை பொறுத்த வரை எனது மகன் எடுத்த 55 சதவீத மதிப்பெண் 85 அல்லது 95 சதவீத மதிப்பெண்ணை விட பெரியது. அவனை நல்லவன் என்றோ, கெட்டவன் என்றோ கூறுவதை விட அவனது மனம் காயப்படாமல் இருப்பது எனக்கு முக்கியமானது. அவன் யாரையும் விட தன்னை குறைந்தவன் என நினைத்து கொள்ளக்கூடாது. எனவே அவனை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறேன்" என கூறியிருந்தார்.
மாணவனின் தந்தை மகிழ்ச்சியை பார்த்து, பலர் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர். ஒரு மாணவர், "நான் 85 சதவீதம் மதிப்பெண் எடுத்தும் எனக்கு இந்த மரியாதை எங்கள் வீட்டில் கிடைக்கவில்லை" என கூறியுள்ளார்.
மற்றொருவர். "இப்படி தான் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை கொண்டாட வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
இன்னொரு மாணவர். "நான் 10-ம் வகுப்பில் 95 சதவீதமும், 12-ம் வகுப்பில் 94.8 சதவீதமும் மதிப்பெண் எடுத்தேன். ஆனால் எனக்கு இதுபோன்ற ஒரு கொண்டாட்டம் கிடைக்கவில்லை" என வருத்தத்துடன் பதிவிட்டு உள்ளார்.