மும்பை மற்றும் புனேவிற்கு ‘ஆரஞ்சு அலர்ட்’ எச்சரிக்கை: விரைவில் தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை!

மும்பை மற்றும் புனேவிற்கு ‘ஆரஞ்சு அலர்ட்’ எச்சரிக்கை: விரைவில் தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை!
Orange alert for Mumbai and Pune
Published on

மகாராஷ்டிராவில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடையத் தொடங்கியுள்ள நிலையில், அடுத்த 48 மணி நேரத்திற்குள் அது மும்பை நகரை முழுமையாகக் கணிக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று மும்பையின் பல்வேறு பகுதிகளில் பெய்த பலத்த மழை, பருவமழைக்கு முந்தைய தற்காலிக சாரல் மழைதான் என்றும் வானிலை மையம் தெளிவுபடுத்தியுள்ளது.

பருவமழை நெருங்கி வருவதை ஒட்டி, மும்பை, புனே, ராய்காட் மற்றும் ரத்னகிரி ஆகிய மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ‘ஆரஞ்சு அலர்ட்’ விடுத்துள்ளது. இதன் காரணமாக இந்த பகுதிகளில் மிகக் கடுமையான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதே நேரத்தில், தானே, பல்கர் மற்றும் சிந்துதுர்க் ஆகிய அண்டை மாவட்டங்களுக்கு ‘மஞ்சள் அலர்ட்’ விடுக்கப்பட்டு, மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நேற்று காலை நிலவரப்படி, பிரஹன் மும்பை மாநகராட்சி வெளியிட்ட தரவுகளின்படி, மும்பை நகரில் சராசரியாக 17 மில்லிமீட்டர் மழையும், மேற்கு புறநகர் பகுதிகளில் 10 மில்லிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. குறிப்பாக போரிவிலி, வொர்லி நாக்கா, பந்த்ரா போன்ற பகுதிகளில் உள்ள சில பள்ளிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் ஒரே மணி நேரத்தில் 60 முதல் 70 மில்லிமீட்டர் வரை மிக பலத்த மழை கொட்டித் தீர்த்துள்ளது.

கடந்த வாரம் சற்று சுணக்கமடைந்திருந்த பருவமழை, தற்போது மேற்கு கடற்கரை மற்றும் மத்திய இந்தியப் பகுதிகளை நோக்கி சீராக நகர்வதற்கு சாதகமான சூழல் உருவாகியுள்ளது. தற்போதைய நிலவரப்படி நாட்டின் ஒட்டுமொத்த மழைப்பொழிவு பற்றாக்குறை 43 சதவீதமாக இருக்கும் சூழலில், இந்த புதிய பருவமழைத் தொடக்கம் விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தேங்கும் மழைநீரால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உள்ளூர் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com