தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு - மக்களவைக்கு கருப்பு சட்டை அணிந்து சென்ற தி.மு.க. எம்.பி.க்கள்

மசோதா தாக்கல் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. கனிமொழி நோட்டீஸ் வழங்கி உள்ளார்.
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு - மக்களவைக்கு கருப்பு சட்டை அணிந்து சென்ற தி.மு.க. எம்.பி.க்கள்
Published on

நாடாளுமன்றத்தில் 3 நாள்.சிறப்பு கூட்டத்தொடர் இன்று (ஏப்ரல் 16) தொடங்கியது.

மகளிர்க்கு 33 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தொகுதி மறுவரையறை செய்வது குறித்த அரசியல் சட்ட திருத்தங்கள் இன்று மக்களவையில் முன்மொழியப்பட உள்ளது.

அரசியலமைப்பு சட்டம் 131-வது திருத்த மசோதா 2026, தொகுதிகள் மறுவரையறை மசோதா 2026, மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டங்கள் திருத்த மசோதா 2026 ஆகிய 3 மசோதாக்கள் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளன.

மகளிருக்கு 280 இடங்களை ஒதுக்கும் வகையில் நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்தி தொகுதி மறுவரையரை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

மக்களவையில் மசோதா குறித்து பாஜக தரப்பில் இருந்து சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வாலிடம் இருந்து விவாதம் தொடங்கும்.

எம்.பி.க்கள் பன்சூரி ஸ்வராஜ், ரக்ஷா கட்சே, அபராஜிதா சாரங்கி, கங்கனா ரனாவத் மற்றும் தர்மஷிலா குப்தா ஆகியோர் பேச உள்ளனர். பிற்பகல் 3 மணி தொடங்கி 3.30க்குள் பிரதமர் மோடி மக்களவையில் பேச உள்ளார்.

இதற்கிடையே சிறப்புக் கூட்டத்தொடருக்கான வியூகம் குறித்து விவாதிப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர்கள் காங்கிரஸ் தலைவர் கார்கே தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் கூடி விவாதித்தனர்.

இந்நிலையில் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திமுக எம்.பி.க்கள் மக்களவைக்கு கருப்பு சட்டை அணிந்து சென்றுள்ளனர்.

தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. கனிமொழி நோட்டீஸ் வழங்கி உள்ளார்.

முன்னதாக தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருப்பு ஆடை அணிந்து கருப்புக்கொடி ஏற்றினார்.

தொகுதி மறுவரையறை மசோதாவின் நகலை எரித்து முதலமைச்சர் தலைமையில் திமுகவினர் போராட்டம் நடத்தினர்.

திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டது. மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கலைஞர் இல்லத்தில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டது.

அமைச்சர்கள் ரகுபதி, கீதாஜீவன் மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோர் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டது. மூன்று நாட்களுக்கு தமிழகம் முழுவதும் கருப்பு கொடி பறக்க விட திமுக அழைப்பு விடுத்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com