இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள் மட்டுமே பட்டியல் சாதியினர் அந்தஸ்து கோர முடியும்: உச்ச நீதிமன்றம்

இந்து, சீக்கிய, பௌத்த மதங்களை தவிர்த்து வேறு மதங்களுக்கு மாறுபவர்கள் SC அந்தஸ்தை கோரமுடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள் மட்டுமே பட்டியல் சாதியினர் அந்தஸ்து கோர முடியும்: உச்ச நீதிமன்றம்
Published on

இந்து மதம், சீக்கிய மதம் அல்லது பௌத்த மதம் அல்லாத வேறு மதத்திற்கு மாறும் ஒருவர், பட்டியல் சாதி (SC) அந்தஸ்து பெறத் தகுதி பெறமாட்டார் என்றும், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) சட்டத்தின் கீழ் பாதுகாப்பு கோர முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் இன்று (மார்.24) தீர்ப்பளித்துள்ளது.

மேலும், இந்து மதம், சீக்கிய மதம் அல்லது பௌத்த மதத்தைப் பின்பற்றும் நபர்களுக்கு மட்டுமே பட்டியல் சாதி அந்தஸ்து கோரும் உரிமை உண்டு என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

கிறிஸ்தவ மதத்திற்கு மாறி, அந்த மதத்தை தீவிரமாகப் பின்பற்றும் ஒருவர், பட்டியல் சாதி சமூகத்தைச் சேர்ந்தவராகத் தொடர்ந்து அங்கீகரிக்கப்பட முடியாது என்ற ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை, நீதிபதிகள் பி.கே. மிஸ்ரா மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு உறுதி செய்தது.

ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஸ்டர் சிந்தாடா ஆனந்த் என்பவர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. 

அவர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியபிறகு, சில நபர்களிடமிருந்து சாதியரீதியான துன்புறுத்தலை எதிர்கொண்டதாக கூறி, 'பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) சட்டத்தின்' கீழ் பாதுகாப்பு வழங்கக் கோரினார். ஆனால், அவர் மதம் மாறியதால் அந்தச் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு பெறத் தகுதியற்றவர் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சாதி அமைப்பைக் கொண்டிராத அல்லது சாதிப் பாகுபாடுகளை ஏற்றுக்கொள்ளாத ஒரு மதத்திற்கு ஒருவர் மாறும்போது, அவரது பட்டியல் சாதி அந்தஸ்து தானாகவே ரத்தாகிவிடும் என்பதால், அவரிடம் பட்டியல் சாதிச் சான்றிதழ் இருப்பது அவரது வழக்கிற்கு எந்த வகையிலும் உதவாது என்று உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்திருந்த நிலையில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிசெய்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com