ஆவணங்கள் இல்லையென்றால் ‘பிணம்’தான் ஆதாரம் - ரூ.19,300 பணத்திற்காக ஒடிசாவில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்!

வங்கியில் இறந்த தங்கை உயிருடன் இல்லை என நிரூபிக்க எலும்புக்கூட்டை தோண்டி எடுத்து சென்ற அண்ணன்.
ஆவணங்கள் இல்லையென்றால்  ‘பிணம்’தான் ஆதாரம் - ரூ.19,300 பணத்திற்கான ஒடிசாவில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்!
Published on

தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவின் எந்த மாநிலங்களை எடுத்துக் கொண்டாலும், தனியாராக இருந்தாலும் சரி, அது அரசு வங்கியாக இருந்தாலும் சரி, படிக்காதவர்கள், அதாவது குறைந்த படிப்பறிவு உள்ளவர்கள், வயதானவர்கள் சென்றால் அவர்களை வங்கி ஊழியர்கள் நடத்தும் விதம் என்ன என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் ஒடிசாவில் நடந்த ஒரு சம்பவம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. ஒடிசாவின் கியோஞ்சர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜிது முண்டா (55) என்பவரின் தங்கை கக்ரா முண்டா இரண்டு மாதங்களுக்கு முன்பு இறந்துள்ளார். அவரது கணவர் மற்றும் ஒரே குழந்தையும் அவருக்கு முன்னரே இறந்துள்ளனர். இதனால் அவருக்கு எஞ்சியிருந்த ஒரே உறவு அவரது அண்ணன் மட்டும்தான்.

கக்ரா முண்டா மல்லிபாசியில் உள்ள ஒடிசா கிராமின் வங்கியில் கணக்கு வைத்திருந்தார். அதில் ரூ.19,300 பணம் இருந்துள்ளது. தங்கை இறந்தவுடன் இதனை எடுப்பதற்காக ஜிது முண்டா சம்பந்தப்பட்ட வங்கியான ஒடிசா கிராமினை அணுகியுள்ளார்.

ஆனால் அங்கு கக்ரா முண்டா இறந்தது தெரியாமல் சம்பந்தப்பட்டவர் வரவேண்டும் என தெரிவித்துள்ளனர். ஆனால் அவர் இறந்துவிட்டார் என ஜிது கூறியுள்ளனர். இதனையடுத்து வங்கி அதிகாரிகள் இறப்புச் சான்றிதழ் அல்லது வாரிசுச் சான்றிதழ் போன்ற ஆவணங்களைக் கேட்டுள்ளனர். ஆனால் பழங்குடியினரான ஜிதுவிடம் முறையான ஆவணங்கள் இல்லை.

இதனால் சகோதரி இறந்துவிட்டதாக கூறியதை நம்பாத வங்கி ஊழியர்கள் அவரை அலைக்கழித்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த ஜிது முண்டா, ஆத்திரத்திலும், விரக்தியிலும் நேற்று சுடுகாட்டிற்குச் சென்று புதைக்கப்பட்ட உடலைத் தோண்டி, அந்த எலும்புக்கூட்டையே ஆதாரமாகக் காட்ட வங்கிக்குக் கொண்டு சென்றுள்ளார்.

எலும்புக்கூட்டை பார்த்த வங்கியில் இருந்தவர்கள் அதிர்ச்சியிலும், பயத்திலும் உறைந்தனர். இந்தச் சம்பவத்தை அறிந்த காவல்துறையினர் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் தலையிட்டு, ஜிதுவிடம் இருந்து எலும்புக்கூட்டைப் பெற்று மீண்டும் அடக்கம் செய்ய உதவினர். மேலும், அவருக்குத் தேவையான சட்டப்பூர்வ வாரிசுச் சான்றிதழைப் பெற்றுத் தந்து, அந்தப் பணத்தை அவரிடம் ஒப்படைக்க வங்கி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

ஜிது முண்டா அவரது தங்கையின் எலும்புக்கூட்டை சுமந்து செல்வது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. பலரும் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, "ஒரு ஏழை மனிதன் தன் சொந்தப் பணத்தைப் பெறுவது இவ்வளவு கடினமா?" என கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

மேலும் இந்த சம்பவம் ஒரு கட்டமைப்பில் உள்ள குறைபாடுகள் மற்றும் மனிதர்களிடத்தில் மனிதாபிமானம் இல்லாதது குறித்த தீவிரத்தையே காட்டுகிறது. இதனிடையே உரிமை கோரப்படாத வங்கித் கணக்குகளில் பல பில்லியன் ரூபாய் முடங்கிக் கிடப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடியே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com