

வரும் 2027-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அசுர பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று பாரதிய ஜனதா கட்சியின் புதிய தேசிய தலைவர் நிதின் நபீன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் தேசிய தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு, முதன்முறையாக உ.பி. மாநிலத் தலைநகர் லக்னோவிற்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். லக்னோவில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு நிதின் நபீன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், "பாரதிய ஜனதா கட்சி தேர்தல் களத்தில் எப்போதும் தயாராக இருக்கும் ஒரு கட்சி. எந்தவொரு தேர்தலையும் தனித்து எதிர்கொள்ளும் தகுதி பாஜகவிற்கு உண்டு. இருப்பினும், 2027 சட்டமன்றத் தேர்தலில் எங்களின் என்.டி.ஏ கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்தே களம் காண்போம். அனைவரும் ஒன்றிணைந்து உத்தரப் பிரதேசத்தை 'உத்தம பிரதேசமாக' மாற்றுவோம்" என்று கூறினார்.
உத்தரப் பிரதேசத்தின் இந்த வளர்ச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகிய இருவரின் கூட்டுத் தலைமையே காரணம் என்று நிதின் நபீன் புகழாரம் சூட்டினார்.
"எங்கள் தலைவர்களான மோடியும், யோகியும் மக்கள் சேவையை மட்டுமே முதன்மையாகக் கொண்டு உழைத்துள்ளனர். இந்த நல்லாட்சியின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையால், 2027 தேர்தலில் மிக பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்று மீண்டும் ஆட்சியமைப்போம்" என்று அவர் குறிப்பிட்டார்.
2027 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், பாஜகவின் தேர்தல் உத்திகளை வகுக்கவும், அடிமட்ட அளவில் கட்சியைப் பலப்படுத்தவும் இந்த 2 நாள் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.
லக்னோ விமான நிலையம் வந்திறங்கிய நிதின் நபீனுக்கு, முதல்வர் யோகி ஆதித்யநாத், துணை முதலமைச்சர்கள் கேசவ் பிரசாத் மௌரியா, பிரஜேஷ் மற்றும் உ.பி. பாஜக தலைவர் பங்கஜ் சவுத்ரி ஆகியோர் மலர்க்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து 18 கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபெற்ற பிரம்மாண்ட ரோடு ஷோவில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மலர் தூவி வரவேற்றனர்.
கட்சியின் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்களுடன் நிதின் நபீன் தீவிர ஆலோசனை நடத்தினார். அரசின் நலத்திட்டங்கள் ஒவ்வொரு வாக்காளரிடமும் போய்ச் சேருவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், வெறும் தேர்தலை வெல்வது மட்டுமல்ல, 2047-க்குள் 'வளர்ந்த பாரதம்' என்ற இலக்கை அடையும் வரை தொடர் வெற்றிகளைப் பெற உழைக்க வேண்டும் என்றும் அவர் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.
சமாஜ்வாடி கட்சி மற்றும் காங்கிரஸ் ஆகிய எதிர்க்கட்சிகள் உ.பி.யின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் "எதிர்மறை அரசியலை" மட்டுமே செய்து வருவதாக பாஜக தேசிய தலைவர் நிதின் நபீன் கடுமையாகச் சாடினார். அத்தகைய போலி அரசியலை மக்கள் நிராகரிப்பார்கள் என்றும் அவர் கூறினார்.