ஆண்டு வருமானம் ரூ.100 கோடி.. பயிற்சி மைய அதிபர் கைது - நீட் வினாத்தாள் கசிவில் அடுத்தடுத்து அதிர்ச்சி

ஆர்சிசியில் 40 ஆயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர்.
ஆண்டு வருமானம் ரூ.100 கோடி.. பயிற்சி மைய அதிபர் கைது -  நீட் வினாத்தாள் கசிவில் அடுத்தடுத்து அதிர்ச்சி
Published on

கடந்த மே 3 ஆம் தேதி நடப்பாண்டு இளநிலை மருத்துவ படிப்பு மாணவர்கள் சேர்க்கைக்கான நீட் தேர்வு நடைபெற்றது. இதில் சுமார் 25 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தேர்வுக்கு முன்பே அசல் கேள்விகள் அடங்கிய மாதிரி வினாத்தாள் கசிந்தது அண்மையில் தெரியவந்தது.

மகாராஷ்டிராவில் கசியவிடப்பட்ட வினாத்தாள் ராஜஸ்தான் பயிற்சி மையங்களுக்கு அதிக தொகைக்கு விற்கப்பட்டுள்ளது.

அங்கிருந்து கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் வினாத்தாள் லட்சக்கணக்கான ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது.

இந்த முறைகேடுக்கு பின்னால் இயங்கும் மிகப்பெரிய நெட்வொர்க் குறித்த அதிர்ச்சி உண்மைகள் அடுத்தடுத்த கட்ட சிபிஐ விசாரணையில் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதுவரை இந்த விவகாரத்தில் 10 கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறிப்பாக புனேவை வேதியியல் பேராசிரியர் பி.வி. குல்கர்னி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். நீட் தேர்வுக்கு வினாத்தாள் தயாரிக்கும் குழுவில் பல ஆண்டுகளாக இவர் அங்கம் வகித்துள்ளார்.

மாணவர்களிடம் பல லட்சம் கட்டணம் பெற்றுக்கொண்டு சிறப்பு பயிற்சி வகுப்புகள் என்ற பெயரில் ரகசிய வகுப்புகளை குல்கர்னி நடத்தியுள்ளதும் தெரியவந்தது.

இதற்கு மத்தியில் மகராஷ்டிராவின் லத்தூர் மாவட்டத்தில் ஆர்.சி.சி. என்ற பெயரில் நீட் பயிற்சி மையம் நடத்தி வந்த, சிவராஜ் ரகுநாத் மோதிகாவோங்கர் என்பவரை சிபிஐ நேற்று கைது செய்தது.

கடந்த மே 3 ஆம் தேதி தேர்வுக்கு சுமார் 10 நாட்கள் முன்னரே ஏப்ரல் 23 அன்று சிவராஜ் மோதி மோசடி நெட்வொர்க்கிடம் இருந்து வினாத்தாளை பெற்றுள்ளார்.

அவருடைய மொபைல் போனில் இருந்து, நீட் வினாத்தாள்களை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.

சிவராஜ் ரகுநாத் பின்னணி:

விவசாய குடும்பத்தில் பிறந்த சிவராஜ் ஆரம்ப காலத்தில் சைக்கிளில் சென்று, தனியார் டியூசன் வகுப்புகளில் வேதியியல் பாடம் எடுத்து வந்தவர்.

பயிற்சி மையங்களில் அதிக லாபம் கிடைப்பதை அறிந்த அவர் லததூரில் வெறும் 10 மாணவர்களுடன் வாடகை அறையில் ஆர்.சி.சி பயிற்சி மையத்தை தொடங்கினார்.

அவருடைய பயிற்சி மையம் லத்தூரில் பிரபலமடையவே, புனே, நாசிக், சோலாப்பூர், கோலாப்பூர் என ஏழுக்கும் மேற்பட்ட நகரங்களில் அம்மையும் கிளைவிட்டது.

தற்போது ஆர்சிசியில் 40 ஆயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர். ஆர்சிசி மையம், ஆண்டுக்கு ரூ.100 கோடி வருவாய் ஈட்டி வருகிறது.

இந்த விவகாரத்தில் மேலும் பலர் சிக்குவார்கள் என சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே நீட் மறுதேர்வு வரும் ஜூன் 21ந்தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com