நீட் தேர்வு கட்டணம் திரும்பப் பெறுதல்: விண்ணப்பிக்க ஜூலை 14 வரை கால அவகாசம் நீட்டிப்பு!

துல்லியத்தன்மையை உறுதிப்படுத்த ரத்து செய்யப்பட்ட காசோலை நகலையும் பதிவேற்றம் செய்ய வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
NEET Exam Fee Refund
Published on

கடந்த மே மாதம் ரத்து செய்யப்பட்ட நீட் (NEET UG 2026) தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணத்தை மாணவர்கள் திரும்பப் பெறுவதற்கும், தங்களின் வங்கிக் கணக்கு விவரங்களைப் புதுப்பிப்பதற்கும் 'வரும் 14-ஆம் தேதி இரவு வரை' கால அவகாசத்தை நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கடந்த மே 3, 2026 அன்று நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வு, வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடு புகார்கள் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஜூன் 21 அன்று மறுதேர்வு நடத்தப்பட்ட நிலையில், ரத்து செய்யப்பட்ட முந்தைய தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணத்தை மாணவர்களுக்கே நேரடியாகத் திருப்பி வழங்க NTA முடிவு செய்தது.

கால அவகாசம் நீட்டிப்பு:

இதற்கான வங்கிக் கணக்கு விவரங்களை உறுதிசெய்யும் மற்றும் திருத்தம் செய்யும் அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், பல மாணவர்களின் கோரிக்கையை ஏற்று வரும் 14-ஆம் தேதி இரவு வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் தங்களின் அதிகாரப்பூர்வ லாகின் பக்கத்திற்குச் சென்று வங்கிக் கணக்கு எண், வங்கியின் பெயர், மற்றும் IFSC குறியீடு போன்ற விவரங்களைச் சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும் அல்லது தேவைப்படின் திருத்தங்கள் மேற்கொள்ளலாம். துல்லியத்தன்மையை உறுதிப்படுத்த ரத்து செய்யப்பட்ட காசோலை நகலையும் பதிவேற்றம் செய்ய வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கட்டண விவரங்கள் (பிரிவு வாரியாக):

* பொதுப் பிரிவு (General): ரூ.1,700

* OBC-NCL / EWS பிரிவினர்: ரூ.1,600

* SC / ST / PwD / மூன்றாம் பாலினத்தவர்: ரூ.1,000

* வெளிநாட்டு வாழ் இந்தியர்கள்: ரூ.9,500

விவரங்களைச் சரியாகப் பதிவிடாத அல்லது தவறான வங்கித் தகவல்களை அளிக்கும் மாணவர்களுக்குக் கட்டணம் திரும்பக் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம் என்பதால், இறுதி நாளுக்குள் சரிபார்க்குமாறு NTA அறிவுறுத்தியுள்ளது.

மாணவர்கள் தங்களின் விவரங்களை தேசிய தேர்வு முகமையின் https://neet.nta.nic.in அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டுமே சமர்ப்பிக்க முடியும்.

X

Maalai Malar
www.maalaimalar.com