

தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) கட்சியின் மூத்த தலைவர் சரத் பவார், நேற்று மும்பையில் நடைபெற்ற முன்னாள் சகாக்கள் மற்றும் அரசியல் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்ட சிறப்பு கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக பேசியுள்ளார்.
சிறப்பு கூட்டத்தில் சரத் பவார் பேசியதாவது:-
பிரதமர் நரேந்திர மோடி தற்போது 5 நாடுகளுக்கான அரசு முறை வெளிநாட்டுப் பயணத்தை சிறப்பாக மேற்கொண்டு வருகிறார். நமக்குள்ளே அரசியல் ரீதியாகப் பல கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், நாட்டின் எல்லையைத் தாண்டி வெளியுலகிற்கு செல்லும்போது, இந்தியாவின் கவுரவத்தை காக்கும் பொறுப்பை நாட்டின் பிரதமர் சுமக்கிறார் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடுகளில் இந்தியாவின் பெருமையையும், உலக அரங்கில் நம் நாட்டின் நன்மதிப்பையும் நிலைநிறுத்துவதற்கான பணிகளை மிகச் சிறப்பாகச் செய்து வருகிறார்.
தேசிய நலன் மற்றும் நாட்டின் நற்பெயர் என்று வரும்போது, அரசியல் ரீதியான போட்டி மற்றும் கட்சிப் பாகுபாடுகளை நாம் உள்ளே கொண்டு வரக் கூடாது. நாட்டின் நலனே அரசியலை விட முதன்மையானது.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சோவியத் யூனியன் சென்றிருந்தபோது, இந்தியாவின் பிரதமருக்கான மரியாதை குறையாமல் தேசத்தின் கவுரவத்தை நிலைநிறுத்திய வரலாற்றுச் சம்பவத்தையும் சுட்டிக்காட்டி, பிரதமர் பதவிக்கு நாம் அனைவரும் மதிப்பளிக்க வேண்டும்.
இவ்வாறு சரத் பவார் கூறினார்.
இந்தச் சூழலில், எதிர்க்கட்சியான காங்கிரஸின் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பிரதமரின் இந்த பயணத்தை விமர்சித்திருந்தனர். ஆனால் எதிர்க்கட்சி கூட்டணியில் இருந்துகொண்டே, காங்கிரஸ் தலைவர்களின் விமர்சனங்களுக்கு மாறாக சரத் பவார் பிரதமரின் வெளியுறவு கொள்கையை ஆதரித்துப் பேசியிருப்பது தேசிய அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.