search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜனதா எம்.பி.க்கள் ராஜினாமா
    X

    சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜனதா எம்.பி.க்கள் ராஜினாமா

    • ஐந்து மாநில தேர்தலில்களில் 12 எம்.பி.க்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
    • ராஜினாமா செய்துள்ள அவர்களுக்கு மாநில மந்திரி சபையில இடம் கிடைக்க வாய்ப்பு

    கடந்த மாதம் நடந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் பா.ஜனதா வெற்றி பெற்றது. தெலுங்கானாவில் காங்கிரசும், மிசோரம் மாநிலத்தில் சோரம் மக்கள் இயக்கமும் (மாநில கட்சி) ஆட்சியை கைப்பற்றின.

    இந்த தேர்தலில், மத்திய மந்திரிகளாக இருந்த சிலரும், எம்.பி.க்கள் சிலரும் போட்டியிட்டனர். இவர்களில் 12 பேர் வெற்றி பெற்று இருக்கிறார்கள்.

    வெற்றி பெற்றவர்களில் மத்திய வேளாண்துறை மந்திரி நரேந்திரசிங் தோமர், நீர்வளத்துறை இணை மந்திரி பிரகலாத்சிங் பட்டேல் ஆகியோரும் அடங்குவர். இவர்கள் மத்திய பிரதேச மாநில சட்டசபைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளனர். 2 மத்திய மந்திரிகளும் நேற்று நாடாளுமன்றத்துக்கு வந்து தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

    இதேபோல், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ராகேஷ் சிங், உத்ய பிரதாப் சிங் மற்றும் ரித்தி பதக், ராஜஸ்தானை சேர்ந்த கிரோடி லால் மீனா, தியா குமாரி மற்றும் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், சத்தீஸ்கரைச் சேர்ந்த கோமதி சாய், அருண் சாவ் ஆகியோரும் நேற்று தங்களது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தனர்.

    இந்த 12 எம்.பி.க்களில் கிரோடிலால் மீனாவை தவிர மற்ற அனைவரும் மக்களவை உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜினாமா செய்துள்ளது 12 எம்.பி.க்களும் 3 மாநிலங்களில் அமையும் பா.ஜனதா அரசுகளில் இடம்பெறுவார்கள் என்று தெரிகிறது.

    12 பேரும் ராஜினாமா கடிதங்களை மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் மற்றும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் அளித்தனர்.

    அப்போது பா.ஜனதா தேசிய தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஜே.பி.நட்டா உடன் இருந்தார். முன்னதாக அவர்கள் பிரதமர் மோடியை சந்தித்து ஆசி பெற்றனர். இதற்கிடையே, மாநிலங்களவை எம்.பி. கிரோடி லால் மீனாவின் ராஜினாமாவை உடனடியாக ஏற்றுக்கொண்டதாக மாநிலங்களவையில் அதன் தலைவர் ஜெகதீப் தன்கர் அறிவித்தார்.

    முன்னதாக சபையில் பேசிய கிரோடி லால் மீனா, பசுவை தேசிய விலங்காக அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டார். இந்திய கலாசாரத்தின் அங்கம் பசு என்பதால், அதை தேசிய விலங்காக அறிவிப்பதற்கான காலம் கனிந்து விட்டதாக அவர் கூறினார்.

    மத்திய பிரதேசத்தில் ஏற்கனவே பா.ஜனதா ஆட்சிதான் இருந்தது. அங்கு சிவராஜ்சிங் சவுகான் முதல்-மந்திரியாக இருந்தார். இவர் ஏற்கனவே 4 முறை முதல்-மந்திரியாக இருந்துள்ளதால் இந்த முறை புதுமுகத்துக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதுமுகமாக நரேந்திரசிங் தோமர் அல்லது பிரகலாத் சிங் பட்டேலுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என கூறப்படுகிறது.

    ராஜஸ்தான் மாநிலத்தில் வசுந்தரா ராஜே சிந்தியாவுக்கு முதல்-மந்திரி பதவி கிடைக்கும் என்றும், சத்தீஸ்கர் மாநிலத்தில் 71 வயதான ராமன் சிங்குக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும் என்றும் கருதப்படுகிறது. இவர்கள் ஏற்கனவே அங்கு முதல்-மந்திரியாக இருந்தார்கள்.

    ஆனால், வசுந்தரா ராஜேவுக்கு கட்சி மேலிடத்துடன் சுமுக உறவு இல்லை என்று கூறப்படுகிறது.

    ராமன்சிங்குக்கு வயதாகி விட்டதால், இளம் தலைமுறையை சேர்ந்த ஒருவர் முதல்-மந்திரியாக நியமிக்கப்படலாம் என்றும் பேசப்படுகிறது. ஓ.பி.சி. சமூகத்தை சேர்ந்த அருண் சாவ், பழங்குடியின சமூகத்தை சேர்ந்த கோமதி சாய் ஆகியோர் முதல்-மந்திரி பதவிக்கு பரிசீலிக்கப்படுகிறார்கள்.

    3 மாநிலங்களிலும் துணை முதல்-மந்திரிகள் நியமிக்கப்படுவதற்கான வாய்ப்பை பா.ஜனதா வட்டாரங்கள் மறுக்கவில்லை. நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு, 3 மாநிலங்களிலும் முதல்-மந்திரி தேர்வு அமையும் என்று பா.ஜனதா வட்டாரங்கள் தெரிவித்தன.

    தற்போது மத்திய மந்திரிசபையில் இருந்து மந்திரிகள் வெளியேறுவதால் மத்திய மந்திரிசபை வர இருக்கிற நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் மாற்றி அமைக்கப்படுமா? இல்லையா? என்பது டெல்லியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    Next Story
    ×