ஜூலை 20 முதல் மழைக்கால கூட்டத்தொடர்- அமைச்சர் கிரண் ரிஜிஜூ அறிவிப்பு

மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன.
Minister Kiran rijiju
Published on

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ம் தேதி தொடங்கும் என அமைச்சர் கிரண் ரிஜிஜூ அறிவித்துள்ளார்.

ஜூலை 20ம் தேதி முதல் ஆகஸ்ட் 13ம் தேதி வரை மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரங்களுக்கான துறை தெரிவித்துள்ளது.

மழைக்கால கூட்டத்தொடரை கூட்டுவதற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளதாக கிரண் ரிஜிஜூ அறிவித்துள்ளார்.

5 மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பிறகு தமிழ்நாடு, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பரபரப்பான இந்த அரசியல் சூழலில் மழைக்கால கூட்டத்தொடர் கூட இருப்பதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மத்திய அரசு தீவிரம்

காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக விலகியுள்ளது. அதேபோல், மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜியின் கட்சி இரண்டாக உடைந்துள்ளது. பல்வேறு அரசியல் திருப்பங்களுக்கு மத்தியில் கூட்டத்தொடர் கூட உள்ள நிலையில், தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் 30 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்தால் தானாகவே முதல்வர், பிரதமர் பதவி பறிபோகும் மசோதா உள்ளிட்டவற்றை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

முக்கிய அம்சங்கள்

இந்த மசோதாக்கள் அரசியல் அமைப்பு மசோதாக்கள் என்பதால், இவற்றில் திருத்தம் மேற்கொள்ள மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை அவசியம். எனவே, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது எனத் தெரிகிறது. நாட்டில் நிலவும் பிரச்சினைகளை எழுப்பி மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கவும் எதிர்க்கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com