என்னால் ஆயிரம் பேரை.., கொலை செய்யப்பட்ட மனைவி சொன்ன அந்த சொல்- கணவனின் ஆயுள் தண்டனையை குறைத்த நீதிமன்றம்

மத்திய பிரதேச மாநிலத்தில் 7 மாத கர்ப்பிணி பெண்ணை கொலை செய்த வழக்கில், கணவருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை உயர்நீமன்றம் குறைத்துள்ளது.
மத்திய பிரதேச உயர்நீதிமன்றம்
மத்திய பிரதேச உயர்நீதிமன்றம்
Published on

உன்னைப் போன்று ஆயிரம் பேர்களை வைத்துக் கொள்ள முடியும் என்ற கணவரிடம் கூறியதால், அந்த ஆத்திரமூட்டும் செயல்தான் மனைவியை கொல்ல கணவனை தூண்டியது என்று ஆயுள் தண்டனையை மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் 7 வருட கடுங்காவல் தண்டனையாக குறைத்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ஷிவா. இவரது மனைவி கிரண். இவர் 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு குல்பஹேரி ஆற்றங்கரையோரம் ஷிவா தனது மனைவியை கல்லால் அடித்து கொலை செய்துள்ளார். இதனால் ஷிவா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

விசாரணை நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை

சிந்த்வாரா விசாரணை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடிவில் கர்ப்பிணி மனைவியை கொலை செய்தற்காக கணவர் ஷிவாவிற்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

இந்த ஆயுள் தண்டனையை எதிர்த்து மத்திய பிரதேச மாநிலம் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். நீதிபதிகள் விவேக் அகர்வால், அவனிந்த்ர குமார் சிங் அடங்கிய டிவிசின் பெஞ்ச் அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றது. இதனால் விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிவில் சிந்த்வாரா நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை, உயர்நீதிமன்றம் டிவிசன் பெஞ்ச் 7 வருடம் கடுங்காவல் தண்டனையாக குறைத்துள்ளது.

உன்னைப் போன்று ஆயிரம் கணவர்களை என்னால் வைத்துக் கொள்ள முடியும்

ஷிவா தரப்பில், தனக்கும் மனைவிக்கும் இடையில் வார்த்தை தகராறு ஏற்பட்டது. அப்போது உன்னைப் போன்று ஆயிரம் கணவர்களை என்னால் வைத்துக் கொள்ள முடியும் என்று மனைவி கூறினார். இதனால் திடீரென்று ஆவேசம் அடைந்து, கொலை செய்யும் வகையில் இந்த வார்த்தை தூண்டியது என வாதாடப்பட்டது. இதை கருத்தில் கொண்டு டிவிசன் பெஞ்ச் தண்டனையை குறைத்துள்ளது.

வாக்குவாதத்தின்போது ஆவேசத்தில் கூறப்படும் ஒரு ஏளனப் பேச்சு, குற்றவியல் சட்டத்தின் கீழ் தீவிரமான மற்றும் உடனடித் தூண்டுதல் என்ற வகைக்குள் அடங்குமா? சட்டரீதியான மற்றும் சமூக ரீதியான விவாதங்களை இந்த தீர்ப்பு எழுப்பியுள்ளது.

இந்த விசாரணையின்போது டிவிசன் பெஞ்ச் அளித்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

இந்த கொலை சந்தேகத்திற்கு இடமின்றி குற்றவியல் கொலை (culpable homicide) வகையைச் சார்ந்தது என்றாலும், ஆயுள் தண்டனையைத் தக்கவைக்கப் போதுமான காரணங்கள் இல்லை. குற்றத்தின் தன்மையை இந்தியத் தண்டனைச் சட்டத்தின் (IPC) பிரிவு 304 பகுதி II-ன் கீழ் மாற்றி அமைத்து, தண்டனை காலத்தை ஏழு ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டுள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்ட தரப்பு (அரசுத் தரப்பு) வாதத்தின்படி, சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே ஷிவாவே மனைவி கிரணின் உறவினர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு, அவளைக் கொன்றுவிட்டதாக ஒப்புக்கொண்டுள்ளார். அதற்கான காரணம் குறித்துக் கேட்டபோது, ​​"உன்னைப் போன்ற ஆயிரம் பேரை என்னால் வைத்துக் கொள்ள முடியும்" என்று கிரண் கூறியதாகவும், அதனால் ஆத்திரமடைந்த தான் அருகில் கிடந்த கல்லை எடுத்து அவளை தாக்கியதாகவும் அவன் கூறியதாக தெரிகிறது. இச்சம்பவம் குறித்து அவன் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.

கிரண் இறக்கும்போது ஏழு மாத கர்ப்பிணியாக இருந்ததை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சான்றுகள் உறுதிப்படுத்தின. பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவளது முகத்தில் காயங்கள் இருந்ததும், விலா எலும்புகள் மற்றும் மார்பெலும்பு (sternum) உடைந்திருந்ததும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், முக்கிய உறுப்புகளில் ஏற்பட்ட கடுமையான காயங்களால் இதயம் மற்றும் சுவாசச் செயல்பாடு முடங்கியதே அவளது இறப்புக்கு காரணம் என்றும் அதில் முடிவு செய்யப்பட்டது. புலனாய்வாளர்களால் கைப்பற்றப்பட்ட கல்லின் மூலமாகவே அந்தக் காயங்கள் ஏற்பட்டிருக்கக்கூடும் என்றும் மருத்துவர் கருத்து தெரிவித்தார்.

கிரணின் இறப்புக்குச் ஷிவாவே பொறுப்பு என்பதை உறுதிப்படுத்திய அதே வேளையில், அந்தத் தாக்குதலுக்கு இட்டுச் சென்ற சூழ்நிலைகள் குறித்தும் உயர் நீதிமன்றம் முக்கியமாகக் கவனம் செலுத்தியது.

மனைவியை கொலை செய்தது குறித்து உறவினருக்கு தகவல்

முன்னரே திட்டமிட்டு கொலை செய்யும் நோக்கம் குற்றம் சாட்டப்பட்டவருக்கு இருந்திருந்தால், தான் செய்த செயலைப் பற்றி காவல்துறைக்கும் பாதிக்கப்பட்டவரின் உறவினர்களுக்கும் முதலில் தகவல் தெரிவித்திருக்கமாட்டார். இச்சம்பவம் எதிர்பாராத விதமாக நிகழ்ந்ததாகவும், முன்கூட்டியே திட்டமிட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும், தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட கல் சம்பவ இடத்திலேயே கிடந்துள்ளது.

கல் கொண்டு மீண்டும் மீண்டும் தாக்கப்பட்டதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. ஒரே ஒரு கல் மட்டுமே கைப்பற்றப்பட்டு தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதாகவும், அதேவேளையில் சில காயங்கள் சம்பவம் நடந்த பாறைகள் நிறைந்த ஆற்றுப்படுகையினால் ஏற்பட்டிருக்கலாம் என்றும் நீதிமன்றம் கருதுகிறது.

உச்சநீதிமன்ற உத்தரவுகளை சுட்டிக்காட்டிய நீதிபதிகள்

கடுமையான மற்றும் திடீர் ஆத்திரமூட்டலால் ஏற்படும் மரணங்கள் குறித்துப் பேசும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 300-ன் விதிவிலக்கு 1-ஐ அடிப்படையாகக் கொண்டு, குற்றம் சாட்டப்பட்டவரையோ அல்லது அவரது குடும்பத்தினரையோ அவமதிக்கும் வகையிலான கருத்துகள் ஒருவரின் சுயக்கட்டுப்பாட்டை இழக்கச் செய்யும் சூழல்களாகக் கருதப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை சுட்டி காட்டுகிறோம்.

தன்னைப் போன்ற ஆயிரம் கணவர்களை வைத்துக் கொள்ள முடியும் என்று ஒரு மனைவி தன் கணவரிடம் கூறுவது, அந்தக் கணவரின் மதிப்பற்ற தன்மையை மறைமுகமாகச் சுட்டிக்காட்டுவதற்குச் சமம்.

அத்தகைய கூற்று ஒரு மனிதராகவோ அல்லது கணவராகவோ அவருக்கு எந்த மதிப்பும் இல்லை என்பதையே குறிக்கிறது. எனவே இந்த வழக்கின் சூழலில் அது கடுமையான மற்றும் திடீர் ஆத்திரமூட்டலாக அமையக்கூடும்.

இச்செயல் கிரணின் மரணத்திற்கு வழிவகுத்திருந்தாலும், இவ்வழக்கு பிரிவு 304 பகுதி I-ன் கீழ் வராமல், பிரிவு 304 பகுதி II-ன் கீழ் வரும் குறைவான தீவிரத்தன்மை கொண்ட குற்றத்தின் கீழ் வருவதாக முடிவு செய்கிறோம். அதற்கேற்ப, தண்டனையை ஏழு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை மற்றும் ரூ. 1,000 அபராதம் என குறைத்து உத்தரவிடுகிறோம்.

இவ்வாறு தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com