

திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்குள் (TMC) அதிருப்தி பிரிவு, மம்தா பானர்ஜியை கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, ஒரு மாற்று தலைமை அமைப்பை நிறுவி இருப்பதாக அறிவித்துள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் ரீதாப்ரதா பானர்ஜி தலைமையிலான அதிருப்தி குழு, கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி பொறுப்பாளர்களில் கணிசமான பிரிவினரின் ஆதரவை பெற்றிருப்பதாக கூறியது.
கொல்கத்தாவின் முன்னாள் மேயர் ஃபிர்ஹாத் ஹக்கீம் உட்பட, மம்தா பானர்ஜியின் நெருங்கிய கூட்டாளிகள் பலர் கிளர்ச்சி முகாமில் இணைந்துள்ளனர் என்பதும் அந்த குற்றச்சாட்டுகளில் ஒன்றாகும்.
எம்.எல்.ஏ.-க்கள் கூட்டம்:
மேற்கு வங்க சட்டமன்றத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பா.ஜ.க. அரசு தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்த அதே நாளான திங்கட்கிழமையன்று இந்த நிகழ்வுகள் அரங்கேறின. சிறிது நேரத்திற்கு பிறகு, அதிருப்தி திரிணாமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கொல்கத்தாவின் நியூ டவுன் பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் கூட்டத்தை கூட்டினர்.
அதிருப்தி குழுவின் கூற்றுப்படி, தற்போதைய மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் உட்பட சுமார் 500 திரிணாமூல் காங்கிரஸ் தலைவர்கள் சிறப்பு அமர்வில் கலந்துகொண்டனர்.
தேசிய செயற்குழு:
அந்த கூட்டத்தில், கிளர்ச்சியாளர்கள் 30 உறுப்பினர்களை கொண்ட தேசிய செயற்குழு ஒன்றை அமைப்பதாக அறிவித்து, அதனை 'உண்மையான' திரிணாமூல் காங்கிரஸ் என்று அவர்கள் அமைப்பின் முறையான கட்டமைப்பு மையமாக நிலைநிறுத்தினர்.
1998-இல் மம்தா பானர்ஜியால் நிறுவப்பட்ட கட்சியின் கட்டுப்பாட்டை கைப்பற்றும் முயற்சியே இந்தக்கிளர்ச்சியின் மையமாக உள்ளது. கிளர்ச்சி குழுவினர் குரல் வாக்கெடுப்பு மூலம் எம்.எல்.ஏ. அருப் ராயை தலைவராக தேர்ந்தெடுத்தனர்.
புதிய பொறுப்பாளர்கள்:
புதிய கட்டமைப்பில் மூத்த தலைவர்களுக்கு விரைவாக பொறுப்புகள் வழங்கப்பட்டன. ஃபிர்ஹாத் ஹக்கீம், அரூப் பிஸ்வாஸ், ரத்தின் கோஷ் மற்றும் சபினா யாஸ்மின் ஆகியோர் துணை தலைவர்களாக நியமிக்கப்பட்டனர்.
ரிதாப்ரதா பானர்ஜி, ஜாவேத் கான் மற்றும் சந்திபன் சாஹா ஆகியோர் பொது செயலாளர்களாக நியமிக்கப்பட்ட நிலையில், அக்ருஸ்ஸமான் அன்சாரி பொருளாளராக நியமிக்கப்பட்டார்.