

2029 முதல் சட்டமன்றங்களில் பெண்களுக்கு இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கான அரசியலமைப்புத் திருத்த மசோதாவை பிரதமர் நரேந்திர மோடிதான் 'முறியடித்தார்' என்றும், எதிர்க்கட்சிகள் தொகுதி மறுவரையறை மசோதாவை மட்டுமே எதிர்த்துப் போராடின என்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார்.
மேலும் சட்டமன்றத் தேர்தலுக்காக மேற்கு வங்கம் முழுவதும் பிரதமர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்வதைக் கிண்டல் செய்த அவர், மோடிக்கு மாநிலத்தின் முதலமைச்சராக ஆக விருப்பமா என்ன? என்றும் கேள்வி எழுப்பினார்.
மேற்கு வங்க மாநிலம், கூச் பெஹாரில் இன்று தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய கார்கே,
“மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவைக் கொன்றது நீங்கள்தான் (மோடி); நாங்கள் தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்த்துதான் போராடினோம், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை எதிர்த்து அல்ல.
பெண்களின் உரிமைகளையும், நலன்களையும் உறுதி செய்வதில் காங்கிரஸ் எப்போதும் முன்னோடியாகவே உள்ளது. சரோஜினி நாயுடு, இந்திரா காந்தி, சோனியா காந்தி போன்ற பெண் தலைவர்களை கொண்டது காங்கிரஸ்’ என தெரிவித்தார்.