

இந்தியாவின் முதல் தனியார் தங்கச்சுரங்கம் ஆந்திராவில் தொடங்கப்பட்டு உள்ளது. ஆண்டுக்கு 2 டன் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இந்தியா தனது உள்நாட்டுத் தங்கத் தேவையின் பெரும் பகுதியை வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்கிறது. கடந்த 2015 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் மத்திய அரசு கொண்டு வந்த சுரங்கக் கொள்கை சீர்த்திருத்தங்கள் மூலமாக தனியார் நிறுவனங்கள், தங்க சுரங்கங்களை அமைக்கலாம்.
அதன்படி சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவில் முதல்முறையாக வணிகரீதியிலான ஒரு பெரிய தனியார் தங்கச்சுரங்கத் திட்டம் ஆந்திரபிரதேசத்தில் தனது உற்பத்தியைத் தொடங்கியுள்ளது.
கர்னூல் மாவட்டம், துக்கலி மண்டலத்தில் அமைந்துள்ள சுவர்ணகிரி தங்கச் சுரங்கத் திட்டத்தை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.
சுமார் ரூ.405 கோடி முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்தத் திட்டம். நாட்டின் கனிம வளத்துறையில் ஒரு புதிய தொடக்கமாகக் கருதப்படுகிறது.
கடந்த காலங்களில் மவுரிய பேரரசு காலத்திலேயே தங்கம் வெட்டி எடுக்கப்பட்ட பெருமை இந்த சுவர்ணகிரி பகுதிக்கு உண்டு. பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, இப்போது நவீன தொழில்நுட்பத்துடன் இந்தத் தளம் மீண்டும் உயிர் பெற்றுள்ளது.
தற்போது இந்தியாவில் கர்நாடகாவின் 'ஹட்டி' அரசுத் தங்கச் சுரங்கம் மட்டுமே உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்து வரும் நிலையில், அதற்கு மாற்றாக உருவெடுத்துள்ள முதல் பெரிய அளவிலான பாறைகளில் இருந்து நேரடியாக தங்கம் பிரித்தெடுக்கும் தனியார் தளம் இதுவாகும்.
'ஜியோமைசூர் சர்வீசஸ்' மற்றும் 'டெக்கான் கோல்டு மைன்ஸ்' நிறுவனங்கள் இணைந்து இத்திட் டத்தை செயல்படுத்தி உள்ளன.
நடப்பு 2026-27 நிதியாண்டில் முதற்கட்டமாக 400 கிலோ தங்கம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அடுத்தடுத்த ஆண்டுகளில் இது 900 கிலோவாகவும், விரிவாக்கப் பணிகளுக்குப்பின் ஆண்டுக்கு 2 டன்னாகவும் உயர்த்தப்படும்.
முதலாண்டில் மட்டும் ஆந்திர அரசுக்கு 4 சதவீத ராயல்டி மூலம் ரூ.57 கோடி வருவாய் கிடைக்கும். உற்பத்தி 2 டன்னாக உயரும் போது இந்த வருவாய் ரூ.144 கோடியைத் தாண்டும்.
இந்த தங்கசுரங்கத்தைத் திறந்து வைத்துப் பேசிய முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு. "ஆந்திராவை 2047-க்குள் சுவர்ண ஆந்திரா வாக' மாற்றுவதே எங்கள் இலக்கு. இங்கு வெட்டி எடுக்கப்படும் தங்கம் வெளிமாநிலங்களுக்குச் செல்லாமல், இங்கேயே ஆபர ணங்களாக மாற்றப்பட வேண்டும். அதற்காக சுவர்ணகிரியில் பிரமாண்டமான ‘நகை பூங்கா' ஒன்று அமைக்கப்படும்" என்றார்.