

கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் டிஜிட்டல் பொதுக் கட்டமைப்பு (DPI) வளர்ச்சியைப் பெற்றுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டில் இணையப் பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளன.
இந்தியாவின் மொத்த இணைய இணைப்புகளின் எண்ணிக்கை "107 கோடி"யைக் கடந்துள்ளது. தினமும் சராசரியாக "75 கோடி" UPI பணப்பரிவர்த்தனைகள் தடையின்றி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதிவேக இணைய வசதி கொண்ட பிராட்பேண்ட் பயனர்களின் எண்ணிக்கை "100 கோடியை" நெருங்கியுள்ளது. அரசின் டிஜிட்டல் ஆவணச் சேமிப்பு தளமான டிஜிலாக்கரை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை "70 கோடியாக" உயர்ந்துள்ளது.
புதுடெல்லியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன், இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சி உலக நாடுகளையே வியக்க வைத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
சர்வதேச நாணய நிதியம் இந்தியாவின் 'UPI' அமைப்பை உலகின் மிகப்பெரிய நிகழ்நேர பணப்பரிவர்த்தனை கட்டமைப்பு எனப் பாராட்டியுள்ளதை அவர் நினைவு கூர்ந்தார்.
இந்தியாவின் இந்தத் தொழில்நுட்பத்தை இதுவரை "9 நாடுகள்" ஏற்றுக்கொண்டுள்ளன என்றும், வரும் ஆண்டுகளில் மேலும் பல நாடுகள் இதில் இணையவுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் நலத்திட்ட உதவிகள் நேரடியாக மக்களின் வங்கிக் கணக்குகளுக்குச் செல்லும் 'Direct Benefit Transfer' திட்டத்தின் கீழ் தற்போது 323 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் இடைத்தரகர்கள் இன்றி, இதுவரை "51.5 லட்சம் கோடி ரூபாய்" பயனாளிகளின் கணக்குகளுக்கு நேரடியாகச் சென்றடைந்துள்ளது.
2014-ல் ஸ்மார்ட்போன்களை பெருமளவில் இறக்குமதி செய்த இந்தியா, இன்று உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் ஏற்றுமதி நாடாக மாறியுள்ளது. மேலும், தொழில்நுட்பத் தற்சார்பை எட்டும் நோக்கில், 12 செமிகண்டக்டர் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் 'சிஜி செமி' நிறுவனத்தின் புதிய உற்பத்தி ஆலை இந்த வாரமே திறந்து வைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.