என் மலர்tooltip icon

    இந்தியா

    மேகாலயாவின் வாழும் வேர் பாலங்களை யுனெஸ்கோ அங்கீகரிக்க இந்தியா பரிந்துரை
    X

    மேகாலயாவின் வாழும் வேர் பாலங்களை யுனெஸ்கோ அங்கீகரிக்க இந்தியா பரிந்துரை

    • பல நூற்றாண்டுகள் நீடித்து நிற்கும் இந்த உயிருள்ள வேர் பாலங்கள் மனிதர்களுக்கும், இயற்கைக்கும் இடையிலான நல்லிணக்கத்துக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.
    • யுனெஸ்கோ என்பது ஐ.நா. சபையின் ஒரு சிறப்பு அமைப்பாகும்.

    ஷில்லாங்:

    இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள மேகாலயா அதிக காடுகளை கொண்ட மாநிலம் ஆகும். இந்த மாநில மக்களில் பெரும்பாலானோர் தங்கள் வாழ்வாதாரத்துக்காக காடுகளையே நம்பி உள்ளனர். இங்கு அதிக மழையால் அடிக்கடி நிலச்சரிவுகள் ஏற்படுகிறது, இதனால் கான்கிரீட் சாலைகள் மற்றும் இரும்பு பாலங்களை உருவாக்குவது கடினம்.

    இதனால் அங்குள்ள காசி, ஜெயந்தியா மலைகளின் பழங்குடியினரின் தாங்கள் அடர்ந்த காடுகள் வழியாக பயணிக்க பிகஸ் ரப்பர் மரங்களின் வேர்களில் இருந்தே பாலங்களை உருவாக்குகின்றனர். இந்த பாலங்கள் பருவமழை காலத்தில் பெருக்கெடுத்து ஓடும் ஆறுகளையும் நீரோடைகளையும் கடக்க மக்களுக்கு உதவுகின்றன. பல நூற்றாண்டுகள் நீடித்து நிற்கும் இந்த உயிருள்ள வேர் பாலங்கள் மனிதர்களுக்கும், இயற்கைக்கும் இடையிலான நல்லிணக்கத்துக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

    இந்த வாழும் வேர் பாலங்கள் ஆற்றின் இரு முனைகளிலும் உள்ள ரப்பர் மரத்தின் வேர்களை மூங்கில் துண்டுகளுடன் பிணைக்கிறார்கள். இதன் மூலம் வேர்கள் வளர்ந்து பாலங்களாக உருவாகிறது. இதுபோன்ற 100-க்கும் மேற்பட்ட பாலங்கள் மேகாலயா முழுவதும் பரவியுள்ளன.

    மேகாலயாவின் இந்த வாழும் வேர் பாலங்களை 2026-27-ம் ஆண்டுக்கான உலக பாரம்பரிய பட்டியலில் சேர்ப்பதற்கான பரிசீலனைக்காக, அதன் பரிந்துரை ஆவணங்களை பாரீசில் உள்ள யுனெஸ்கோ அமைப்பிடம் இந்தியா சமர்ப்பித்துள்ளது.

    இதுகுறித்து மேகாலயா முதல்-மந்திரி கான்ராட் சங்மா சமூக வலைதளத்தில், "யுனெஸ்கோவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி யான விஷால் வி ஷர்மா மேகாலயாவின் வாழும் வேர் பாலங்கள் தொடர்பான ஆவணங்களை யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய மையத்தின் இயக்குனர் லசாரே அஸ்ஸோமோ எலோண்டூவிடம் ஒப்படைத்தார். இந்த ஆண்டு வாழும் வேர் பாலங்கள் பட்டியலில் சேர்க்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். இதன் மூலம் இந்த வாழும் பாரம்பரியத்தின் உண்மையான பாதுகாவலர்களான பழங்குடி சமூகங்கள், அவர்கள் தகுதியான உலகளாவிய அங்கீகாரத்தை பெறுவதை இது உறுதி செய்யும்" என கூறியுள்ளார்.

    யுனெஸ்கோ என்பது ஐ.நா. சபையின் ஒரு சிறப்பு அமைப்பாகும். இது கல்வி, அறிவியல், கலாசாரம் மற்றும் தகவல் தொடர்பு துறைகளில் சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலம் உலக அமைதி மற்றும் பாதுகாப்பை வளர்ப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்த அமைப்பு உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த இயற்கை மற்றும் கலாச்சார இடங்களை பாரம்பரிய தளங்களாக பட்டியலிடுகிறது.

    Next Story
    ×