

சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் உள்ள ஒரு பழங்குடியின கிராம மக்கள், அப்பகுதியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள சாலைகளின் அவலநிலையை குறிப்பிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.
அக்கடிதத்தில், சாலைபோட முடியாவிட்டால், குறைந்தபட்சம் அவசரகால தேவைகளுக்காக ஒரு ஹெலிகாப்டரையாவது கிராம மக்களின் பயன்பாட்டிற்கு தாருங்கள் என தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
அவர்கள் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதுபடி, மருகி கிராமத்தை இணைக்கும் 12 கிலோமீட்டர் நீளமுள்ள சாலை கிட்டத்தட்ட கடந்த 10 ஆண்டுகளாக முடிக்கப்படாமல் உள்ளது. ஒப்பந்தக்காரர்கள் பெரிய பள்ளங்களைத் தோண்டி, பாலங்கள் மற்றும் சிறுபாலங்களுக்கான கட்டுமானப் பணிகளைத் தொடங்கியதாகவும், ஆனால் அதை அப்படியே கிடப்பில் போட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
பள்ளம் தோண்டப்பட்டதால் வந்த சரளைகளும், கற்களும் சிதறி மண்பாதையிலும் கிடப்பதால் அவ்வழியே செல்வது இன்னும் சிரமமாகியுள்ளது. குறிப்பாக மழைக்காலங்களில் அப்பள்ளங்களில் தண்ணீர் தேங்குவதால் இன்னும் கடினமான சூழல் ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர்.
சாதாரண நாட்களை தாண்டி, மருத்துவ தேவைகள் ஏற்படும்போது நிலைமை இன்னும் சிக்கலாகிறது. கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் மற்றும் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளை கட்டிலில் சுமந்து பிரதான சாலைக்கு கொண்டுசெல்லும் அவலம் உள்ளது.
இதுதொடர்பாக பேசியுள்ள அக்கிராமத் தலைவர், “மாவட்ட அதிகாரிகள் முதல் மாவட்ட ஆட்சியர் வரை ஒவ்வொருவரின் வீட்டு வாசலிலும் ஏறி மனுக்களை கொடுத்துள்ளோம். ஒவ்வொரு முறையும் வாக்குறுதி தருகிறார்களே தவிர, களத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. எங்கள் குறைகளைக் கேட்க யாரும் தயாராக இல்லை” என தெரிவித்தார்.
கிராமவாசிகள் இவ்வாறு கூறும்நிலையில், பணிகள் முடிக்கப்படாமல் இருப்பதற்கு நக்சலைட் செயல்பாடுகளையே காரணம் என அதிகாரிகள் தெரிவிப்பதாகவும் கூறுகின்றனர். இப்பகுதி தற்போது 'நக்சலைட்டுகள் இல்லாத பகுதி' என அரசால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் ஏன் சாலை வசதிகள் செய்து தரப்படவில்லை என்று கிராம மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இறுதியாக தங்களின் இந்த ஹெலிகாப்டர் வேண்டுகோள், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள சாலைப் பணிகளை முடிக்கவும், பணிகளை மேம்படுத்த அரசை தூண்டும் எனவும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.