‘மகன்தான் வேண்டும்’... இரட்டை தேவதைகளை விஷம் கொடுத்து கிணற்றில் வீசிய கொடூரன்

தெலங்கானாவில் தந்தையே இரட்டை பெண் குழந்தைகளை விஷம் வைத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
‘மகன்தான் வேண்டும்’... இரட்டை தேவதைகளை விஷம் கொடுத்து கிணற்றில் தூக்கி வீசிய கொடூர தந்தை
Published on

தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில், ஆண் வாரிசு இல்லை என்ற விரக்தியில் தனது 4 வயது இரட்டை பெண் குழந்தைகளைக் கொடூரமாகக் கொன்ற தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.

தெலங்கானாவின் கரீம்நகர் மாவட்டத்தின் ஜூபிலி நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீசைலம் (28). தனியார் ஊழியரான இவருக்கு மௌனிகா என்பவருடன் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதியருக்கு நான்கு வயதுடைய கீதான்ஷி மற்றும் கீதான்விகா என்ற இரட்டைப் பெண் குழந்தைகள் உள்ளனர்.

பெண்குழந்தைகள் பிறந்ததில் இருந்தே மனைவிக்கும், இவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ஆண் குழந்தை பிறக்கவில்லை என்பதால் அடிக்கடி சண்டைவர, உறவினர்கள் தலையிட்டு பிரச்சனையை தீர்த்து வைத்து வந்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவத்தன்று (ஏப்.3) மீண்டும் மனைவிக்கும், ஸ்ரீசைலத்திற்கும் இடையே இதுதொடர்பாக சண்டை வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து மனைவி வெளியே செல்ல ஸ்ரீசைலம் குழந்தைகளை வயலுக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அவர்களுக்கு விஷம் (பூச்சிக்கொல்லி மருந்து) கொடுத்து, அங்கிருந்த கிணற்றில் குழந்தைகளை தூக்கிப் போட்டுள்ளார்.

இதில் இருவரும் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். விஷயம் தெரியவர உள்ளூர்வாசிகள் ஸ்ரீசைலத்தைப் பிடித்து, காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து குழந்தைகளின் உடல்களை கிணற்றிலிருந்து மீட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com