‘எம்.பி. சீட் வேண்டாம்... என் கடைசி மூச்சுவரை கர்நாடகாவில்தான்’ - சித்தராமையா!

மாநிலங்களவை செல்ல விருப்பமில்லை என தலைமையிடம் தெரிவித்துவிட்டேன்.
‘எம்.பி. சீட் வேண்டாம்... என் கடைசி மூச்சுவரை கர்நாடகாதான்’ - சித்தராமையா!
Published on

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,

“நான் இரண்டுமுறை முதலமைச்சராக இருந்துள்ளேன். அக்காலக்கட்டத்தில் எனக்கு அன்பு காட்டிய அனைவருக்கும் நன்றி. 2013 முதல் இந்நாள் வரை, இக்காலகட்டத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றிய எனது சகாக்கள் அனைவரும் எனக்கு அனைத்து விதமான ஆதரவையும், ஒத்துழைப்பையும், அன்பையும் வழங்கியுள்ளனர்.

நான் ஒரு கிராமத்தில் இருந்து வந்தவன். கனவில்கூட சட்டமன்ற உறுப்பினராகவோ, அமைச்சராகவோ அல்லது முதலமைச்சராகவோ ஆவேன் என்று நினைத்ததில்லை. என் குடும்பத்தில் யாரும் அரசியலில் இல்லை. எனது அரசியல் பயணம் என்பது தற்செயலாக நடந்தது.

தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற நாங்கள் பணியாற்றியுள்ளோம். 2013-ல் நாங்கள் 163 வாக்குறுதிகளை அளித்தோம், அதில் 158 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். 2023-ல் நாங்கள் 550-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அளித்தோம். அதில் 300 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். மேலும், நாங்கள் 5 உத்தரவாதத் திட்டங்களை அறிவித்தோம், அவற்றை முதல் ஆண்டிலேயே நிறைவேற்றியுள்ளோம்.

மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டேன். நாங்கள் எங்கள் வாக்கை மீறவில்லை. இது எனக்கும் எங்கள் கட்சிக்கும் மிகுந்த மனநிறைவை அளித்துள்ளது. எதிர்க்கட்சியினர் என்னைக் குறித்து தவறான தகவல்களை பரப்பியுள்ளனர்.

பிரதமர் மோடி உட்பட, அவர்கள் எனக்கு எதிராகத் தவறான தகவல்களைப் பரப்பியுள்ளனர். வளர்ச்சிப் பணிகளுக்குப் பணம் இருக்காது என்றும், அரசு கஜானா காலியாகிவிடும் என்றும் கூறினார்கள். ஆனால் உத்தரவாதத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட பிறகும், வருவாயில் ஒட்டுமொத்த நாட்டிலேயே முதலிடத்தில் கர்நாடகா உள்ளது.

ஜிஎஸ்டி வசூலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா முதலிடத்திலும், கர்நாடகா இரண்டாம் இடத்திலும் உள்ளன.

நான் மட்டுமல்ல, என் குடும்பமும் அரசியல் வெறுப்புக்கு பலியானது. அரசியலில் இருந்து விலகியும், குடும்பத்தை மட்டுமே கவனித்துவரும் என் மனைவிமீதும் பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி, அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கினார்கள். இதனால் அரசியலில் இருந்து விலகிவிடலாம் என்றுகூட எண்ணினேன். ஆனால், எதிரிகளை கண்டு அஞ்சக்கூடாது என்றும், மக்கள் பணியிலிருந்து பின்வாங்கக்கூடாது என்றும் என் மனம் கூறியது.

எனவேதான் அநீதிக்கு எதிரான நீதிக்கான போராட்டத்தை நான் தொடர்ந்து நடத்தி, என் மீதான குற்றச்சாட்டுகளின் கறையைத் துடைத்து என்னைக் விடுவித்துக் கொண்டேன்.

தலைமையின் அறிவுறுத்தலின்பேரிலேயே நான் ராஜினாமா செய்துள்ளேன். மாநிலங்களவை செல்ல விருப்பமில்லை என தலைமையிடம் தெரிவித்துவிட்டேன். எனது கடைசி மூச்சு வரை நான் கர்நாடக அரசியலிலேயே தொடர்வேன்.” என தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com