சோழர்களால் பெருமை கொள்கிறோம்.. செப்பேடுகள் இந்தியா திரும்புவது குறித்து பிரதமர் மோடி பூரிப்பு

உலகின் மிகவும் அழகான மொழிகளுள் ஒன்றான தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன.
சோழர்களால் பெருமை கொள்கிறோம்.. செப்பேடுகள் இந்தியா திரும்புவது குறித்து பிரதமர் மோடி பூரிப்பு
Published on

வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மோடி, அமீரகத்தை தொடர்ந்து அங்கிருந்து நெதர்லாந்து சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அங்கு பிரதமர் மோடியின் முன்னிலையில், பிரசித்தி பெற்ற ஆனைமங்கலம் தாமிர தகடுகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன. இவை லெய்டன் தகடுகள் என அழைக்கப்படுகின்றன.

தென்னிந்திய அரசாட்சிகளில் ஒன்றான 11-ம் நூற்றாண்டு சோழ அரசாட்சி காலத்திலான இந்தக் கலை பொருட்கள் லெய்டன் பல்கலைக்கழகத்தில் கடந்த 300 ஆண்டாக வைக்கப்பட்டு இருந்தன.

மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்ட முயற்சிகளின் பயனாக, 2023ல் யுனெஸ்கோ அமைப்பின் தலையீட்டால் இந்த செப்பேடுகள் திருப்பி தரப்பட்டுள்ளன.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி தமிழில் வெளியிட்டுள்ள பதிவில்,

"இந்தியர் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான தருணம்!.

11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால செப்பேடுகள், நெதர்லாந்தில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பவும் கொண்டுவரப்பட இருக்கின்றன. இது தொடர்பான விழாவில் பிரதமர் ராப் ஜெட்டன் அவர்களுடன் இணைந்து பங்கேற்றேன்.

சோழர் கால செப்பேடுகள், 21 பெரிய மற்றும் 3 சிறிய தகடுகளின் தொகுப்பாகும். இவற்றில் பெரும்பாலான எழுத்துக்கள் உலகின் மிகவும் அழகான மொழிகளுள் ஒன்றான தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன.

இவை மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழன் தனது தந்தை முதலாம் ராஜராஜனால் வாய்மொழியாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை முறைப்படுத்தியதை குறிக்கின்றன.

மேலும், இவை சோழர்களின் பெருமையையும் பறைசாற்றுகின்றன. இந்தியர்களாகிய நாம், சோழர்களின் கலாச்சாரம், கடற்படைத் திறமை ஆகியவற்றால் மிகுந்த பெருமை கொள்கிறோம்.

நெதர்லாந்து அரசுக்கும், குறிப்பாக 19-ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் இருந்து செப்பேடுகளைப் பாதுகாத்து வந்த லெய்டன் பல்கலைக்கழகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com