திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு- 3 கிலோ மீட்டர் தூரம் வரிசையில் காத்திருந்து தரிசனம்| Tirupati Temple

அலிபிரி சோதனை சாவடியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய வாகனங்களை படத்தில் காணலாம்.
Published on
Summary

புத்தாண்டு பிறப்பு முன்னிட்டு புதிய பஞ்சாங்கம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று காலை 9 மணி முதல் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கூட்டம் படிப்படியாக அதிகரித்து காணப்பட்டது. வார இறுதி விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் அதிக அளவில் தரிசனத்திற்கு வர தொடங்கினர்.

திரளான பக்தர்கள் தரிசனத்திற்கு தங்கள் வாகனங்கள் மூலம் வந்ததால் அலிபிரி சோதனை சாவடியில் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. பஸ்கள் செல்லும் வரிசையில் சிலர் தங்களது வாகனங்களை புகுத்தினர். இதனால் பஸ்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். போலீசார் மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் கோவிலில் இருந்து 3 கிலோமீட்டர் தூரம் உள்ள ஷீலா தோரணம் வரை பக்தர்கள் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்தனர். திருப்பதியில் கடும் வெயில் கொளுத்துவதால் முதியவர்கள் குழந்தைகள் பாதிக்கப்பட்டனர்.

இந்த மாதம் 3 ஆஸ்தானங்கள் நடைபெறுகிறது. ஒரு ஆஸ்தானம் பாரம்பரியமாக நடைபெறும் ஆஸ்தானமாகும். கோவில் நீதிமன்றம் ஆகும் சிறப்பு ஆஸ்தானம் கருடாழ்வார் முன்னிலையில் நடைபெறுகிறது.

வருகிற 19-ந்தேதி தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு ஆஸ்தானம் நடைபெறுகிறது.

ஏழுமலையான் மற்றும் உற்சவமூர்த்திகளுக்கு புதிய பட்டு வஸ்திரங்கள் அணிவிக்கப்படும். வேத பண்டிதர்கள் ஏழுமலையான் முன்னிலையில் கடந்த ஆண்டு வரவு செலவு பஞ்சாங்கம் படிக்க உள்ளனர். புத்தாண்டு பிறப்பு முன்னிட்டு புதிய பஞ்சாங்கம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

இந்த நிகழ்ச்சி காலை 7 மணி முதல் 9 மணி வரை நடைபெறுகிறது.

வருகிற 27-ந்தேதி ஸ்ரீராம நவமி ஆஸ்தானம் நடைபெறுகிறது. இரவு 9 மணி முதல் 10 மணி வரை கருடாழ்வார் முன்னிலையில் ஆஸ்தானம் நடைபெறுகிறது.

ஆஸ்தானத்தை முன்னிட்டு மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை ஏழுமலையான் ஹனுமந்த வாகனத்தில் 4 மாட வீதிகளில் உலா வருகிறார்.

ராம நவமிக்கு மறுநாள் இரவு 8 மணி முதல் 9 மணி வரை ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்திக்கு முடி சூட்டு விழா நடைபெற உள்ளது.

திருப்பதியில் நேற்று 85, 132 பேர் தரிசனம் செய்தனர். 38,855 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.62 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 18 மணி நேரமும், ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டில் வந்த பக்தர்கள் 4 மணி நேரமும் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com