கேரளம் சட்டசபை தேர்தலில் முதன்முறையாக ஓட்டு போடும் புதிய வாக்காளர்களுக்கு ‘அல்வா’

இந்த திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் வாக்குச்சாவடிகளை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அடையாளம் காண்பார்கள்.
கேரளம் சட்டசபை தேர்தலில் முதன்முறையாக ஓட்டு போடும் புதிய வாக்காளர்களுக்கு ‘அல்வா’
Published on

ஒவ்வொரு தேர்தலின் போதும் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவது வாடிக்கையான ஒன்று தான்.

தற்போது சட்டசபை தேர்தல் நடக்கும் தமிழ்நாடு, கேரளம், அசாம், மேற்கு வங்காளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலும் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

இந்தநிலையில் கேரளம் மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் முதன்முதலாக வாக்களிக்க வரும் புதிய வாக்காளர்களுக்கு “அல்வா” வழங்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. இளைஞர்கள் தேர்தலில் அதிகமாக வாக்களிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த நடவடிக்கை செயல்படுத்தப்பட உள்ளது.

கேரளம் மாநில சட்டசபை தேர்தலில் இளைஞர்களின் பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையில் “வாக்கு இனிக்கும் கேரளா இயக்கம்” என்ற தலைப்பிலான ஒரு சிறப்பு திட்டத்தை கேரள தலைமை தேர்தல் அதிகாரி ரத்தன் கேல்கர் அறிவித்துள்ளார். அந்த திட்டத்தின் படியே முதன்முறையாக ஓட்டு போடக்கூடிய வாக்காளர்களுக்கு “அல்வா” வழங்க தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

அதன்பேரில் அனைத்து மாவட்டங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் முதன்முறை வாக்களிப்பவர்களுக்கு “அல்வா” வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் வாக்குச்சாவடிகளை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அடையாளம் காண்பார்கள்.

அவ்வாறு அடையாளம் காணக்கூடிய வாக்குச்சாவடிகளுக்கு வரக்கூடிய புதிய வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக 200 பாக்கெட் “அல்வா” மாவட்ட தேர்தல் அதிகாரிகளின் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

அதனை பெற்றுக்கொள்ளும் தேர்தல் அதிகாரிகள், முதன்முறையாக ஓட்டுப்போட வாக்குச்சாவடிகளுக்கு வரக்கூடிய வாக்காளர்களுக்கு “அல்வா” வழங்க நடவடிக்கை எடுப்பார்கள். முதன்முறையாக ஓட்டு போடும் வாக்காளர்களுக்கு “அல்வா” வழங்கப்படுகிறதா? என்பதை உறுதி செய்யும் பணியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுவார்கள்.

“புதிய வாக்காளர்களுக்கு ‘அல்வா’ வழங்குவது தேர்தல் நடைமுறைகளுக்கு எந்த தடையையும் ஏற்படுத்தக்கூடாது. தேவைப்பட்டால் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு உதவ கூடுதல் தன்னார்வலர்களை பணியில் அமர்த்திக் கொள்ளலாம்” என்று தேர்தல் அதிகாரியின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com