

குஜராத்தில் கணவனே தனது மனைவியை 50 ஆயிரம் ரூபாய்க்கு நண்பர்களுக்கு விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தை சேர்ந்தவர் நிகேஷ் படேல். இவர் கடந்த மே 11 அன்று தனது மனைவியைக் காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஆனால், புகார் அளித்த இரண்டு நாட்களுக்குப் பிறகு நிகேஷும் திடீரென காணாமல் போனதால், அவரது தந்தை காவல் நிலையத்தில் மற்றொரு புகாரைப் பதிவு செய்தார்.
இந்த அடுத்தடுத்த சம்பவங்கள் காவல்துறையினருக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தின.
மறைந்திருந்த நிகேஷைக் கண்டுபிடித்துக் கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது நிகேஷ் கூறியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
தனது மனைவியை பிடிக்காத காரணத்தினால், அவரிடம் இருந்து விலக வேண்டும் என்ற நோக்கத்தில் தனது நண்பர்களான சஞ்சய் தாக்கூர், அசோக் தாக்கூர் மற்றும் சச்சின் தர்பார் ஆகியோரிடம் 50 ஆயிரம் ரூபாய்க்கு அவரை விற்றதை நிகேஷ் ஒப்புக்கொண்டார்.
அவர்கள் பிடியிலிருந்த பாதிக்கப்பட்ட பெண்ணைக் காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
மீட்கப்பட்ட பெண் அளித்த வாக்குமூலத்தில், தன்னை விலை பேசி விற்ற பிறகு ஒரு தனி இடத்தில் அடைத்து வைத்து, தொடர்ந்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமன்றி, தன்னிடம் இருந்த தங்க நகைகளைப் பறித்துக்கொண்டு அவர்கள் விற்றுவிட்டதாகவும் கூறினார்.
நிகேஷ் படேலுக்கும் அவருக்கும் 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இருப்பினும் வேறு இரு பெண்களுடனும் அவர் உறவில் இருந்துள்ளார். மனைவியை விவாகரத்து செய்ய நினைத்த அவர் கடைசியில் காசுக்கு அவரை விற்றுள்ளார் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் நிகேஷ், அவரது நண்பர்கள் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.