"சுற்றுச்சூழல், பழங்குடியினரை சூறையாடும் கிரேட்டர் நிகோபார் திட்டம்.. மழுப்பும் மத்திய அரசு" - கேள்விகளை அடுக்கிய காங்கிரஸ்

வெளி உலகத் தொடர்பற்ற நிலையில் வாழும் 'ஷோம்பென்' பழங்குடியினரின் மொழியை அறிந்தவர்கள் யாரும் இல்லாதபோது, அவர்களிடம் எவ்வாறு சட்டப்படி ஒப்புதல் பெறப்பட்டது
"சுற்றுச்சூழல், பழங்குடியினரை சூறையாடும் கிரேட்டர் நிகோபார் திட்டம்.. மழுப்பும் மத்திய அரசு" - கேள்விகளை அடுக்கிய காங்கிரஸ்
Published on

மத்திய அரசு அந்தமான் நிகோபார் தீவுகளில் கொள்ள உள்ள கிரேட்டர் நிகோபார் திட்டம் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகின்றன.

இந்தத் திட்டத்தின் கீழ் அந்தமான் நிக்கோபாரில் ஒரு டிரான்ஸ்-ஷிப்மென்ட் சரக்கு துறைமுகம், ஒரு சர்வதேச விமான நிலையம், ஒரு டவுன்ஷிப் மற்றும் ஒரு மின் உற்பத்தி நிலையம் கட்டப்பட உள்ளது.

அதானி குழுமத்தின் அதானி போர்ட்ஸ் இந்த திட்டிற்கான டெண்டரை பெற ஆர்வம் காட்டி வருகிறது.

ரூ.2,72,000 கோடி செலவில் மேற்கொள்ளப்படும் வரும் இந்தத் திட்டம், பழங்குடியினருக்கும், அரிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கும் கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் என மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து எச்சரித்து வருகிறார்.

கடந்த வாரம் கிரேட் நிக்கோபாருக்கு பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி திட்ட பணிகளை பார்வையிட்டு, திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பழங்குடியின சமூகங்களை சந்தித்தார். மேலும் திட்டத்தின் பாதகங்கள் குறித்து அங்கிருந்து பேசி வீடியோவும் வெளியிட்டார்.

இதை விமர்சித்த பாஜக, ராகுல் காந்தி சீனாவுக்கு சாதகமாக செயல்படுவதாக விமர்சித்தது. மத்திய அரசு இந்தத் திட்டம் குறித்து ஒரு விளக்கக் குறிப்பை வெளியிட்டது.

இந்நிலையில் பாஜக நேரடியான கேள்விகளுக்கு பதிலளிக்காமல் மழுப்பி வருவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.

அவர் வெளியிட்ட பதிவில், மத்திய அரசின் விளக்கம் உண்மையான பிரச்சனைகளுக்குப் பதிலளிக்கவில்லை.

துறைமுகம் அமையவுள்ள Galathea Bay பகுதியில் 20,000க்கும் மேற்பட்ட பவளப்பாறை காலனிகள் உள்ளன. இது Giant Leatherback வகை ஆமைகள் முட்டையிடும் மிக முக்கியமான இடமாகும்.

கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளின்படி, இங்கு துறைமுகம் கட்ட அனுமதி இல்லை.

இந்திய வனவிலங்கு நிறுவனம் மற்றும் இந்திய விலங்கியல் ஆய்வு மையம் போன்ற நிறுவனங்கள் இந்தத் திட்டத்திற்கு அனுமதி வழங்கக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

நிக்கோபார் பழங்குடி சமூகம் தங்களது நிலத்தைத் தானாக முன்வந்து ஒப்படைக்கக் கட்டாயப்படுத்தப்படுவதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

வெளி உலகத் தொடர்பற்ற நிலையில் வாழும் 'ஷோம்பென்' பழங்குடியினரின் மொழியை அறிந்தவர்கள் யாரும் இல்லாதபோது, அவர்களிடம் எவ்வாறு சட்டப்படி ஒப்புதல் பெறப்பட்டது

கடலோர மேலாண்மை மையத்தின் கள ஆய்வு அறிக்கைகள் போன்றவை ஏன் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.

தற்போது போர்ட் பிளேயர் விமான நிலையம் ஆண்டுக்கு 1.8 மில்லியன் பயணிகளைக் கையாளும் நிலையில், இந்தத் தீவில் 10 மில்லியன் பயணிகளைக் கையாளும் விமான நிலையம் அமைப்போம் என்பது மிகைப்படுத்தப்பட்ட கணக்கு.

பாதுகாப்பு என்ற பெயரில் விவாதங்களை மத்திய அரசு முடக்கக் கூடாது. இந்தத் திட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com