டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு நோட்டீஸ்: திருட்டுத் திரைப்படங்கள்-ஓடிடி உள்ளடக்கங்களை முடக்க 15 நாட்கள் கெடு!

அவ்வாறு செய்யத் தவறினால், தகவல் தொழில்நுட்பச் சட்டம் வழங்கும் பாதுகாப்புச் சலுகைகளை டெலிகிராம் இழக்க நேரிடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Government Notice to Telegram
Published on

இந்தியாவில் புதிய திரைப்படங்கள் மற்றும் ஓடிடி வெப் சீரிஸ்கள் சட்டவிரோதமாகப் பகிரப்படுவதைக் கட்டுப்படுத்தத் தவறியதாக, பிரபல குறுஞ்செய்தி செயலியான டெலிகிராமிற்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் இன்று அதிரடி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த நோட்டீஸில், டெலிகிராம் தளத்தில் பரவி வரும் திருட்டுத் திரைப்படங்கள் மற்றும் ஓடிடி உள்ளடக்கங்களுக்கு எதிராக உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அடுத்த 15 நாட்களுக்குள் இது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அடங்கிய விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு கெடு விதித்துள்ளது.

இந்தியாவின் படைப்புத் துறை, சினிமா தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் ஓடிடி தளங்களின் பொருளாதார நலன்களைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவில் பதிப்புரிமை மீறல் என்பது வெறும் சிவில் குற்றம் மட்டுமல்ல, அது 1957 ஆம் ஆண்டின் பதிப்புரிமைச் சட்டம் மற்றும் 1952 ஆம் ஆண்டின் சினிமாட்டோகிராஃப் சட்டத்தின்படி கடுமையான கிரிமினல் குற்றமாகும் என்பதை மத்திய அரசு இந்த நோட்டீஸில் சுட்டிக்காட்டியுள்ளது.

இதுவரை, அரசு புகார் அளிக்கும் குறிப்பிட்ட சேனல்களை மட்டும் நீக்கும் வழக்கமான முறையை டெலிகிராம் பின்பற்றி வந்தது. ஆனால், இனிமேல் அரசாங்கம் வந்து சொல்லும் வரை காத்திருக்காமல், திருட்டுத்தனமாகத் திரைப்படங்களை வெளியிடும் குழுக்கள், சேனல்கள், பாட்கள் மற்றும் அதன் அட்மின்களை டெலிகிராம் நிறுவனமே முன்கூட்டியே கண்டறிந்து தானாகவே முடக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

அவ்வாறு செய்யத் தவறினால், தகவல் தொழில்நுட்பச் சட்டம் (IT Act 2000 மற்றும் IT Rules 2021) வழங்கும் பாதுகாப்புச் சலுகைகளை டெலிகிராம் இழக்க நேரிடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஓடிடி தளங்கள், திரைப்பட இயக்குநர்கள் மற்றும் காவல்துறை போன்ற புலனாய்வு அமைப்புகள் நேரடியாகப் புகார் அளிப்பதற்கான குறைதீர்ப்பு பொறிமுறையை மேம்படுத்த வேண்டும் என்றும் டெலிகிராம் நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் தொடர்பான புகார்களில் சிக்கி, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் தற்காலிகக் கட்டுப்பாடுகளைச் சந்தித்த டெலிகிராம் செயலிக்கு, தற்போது சினிமா திருட்டு விவகாரத்தில் மத்திய அரசு கொடுத்துள்ள இந்த 15 நாட்கள் கெடு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com