உயிரற்ற கருவை நீதிபதிகள் முன் கொண்டுவந்து வைத்த தந்தை - அதிர்ச்சியில் உறைந்த உயர்நீதிமன்றம் |Madhya pradesh

குடியரசுத் தலைவர் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
உயிரற்ற கருவை நீதிபதிகள் முன் கொண்டுவந்து வைத்த தந்தை - அதிர்ச்சியில் உறைந்த உயர்நீதிமன்றம் |Madhya pradesh
Published on

மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் மனுதாரரின் செயலால் நீதிபதிகள் அதிர்ச்சியில் உறைந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

நபர் ஒருவர் மாருதி சுசூகி நிறுவனத்தில் 200 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் முறைகேடு நடந்ததை தான் வெளிப்படுத்தியதால் கடந்த ஒரு ஆண்டாகத் தனது குடும்பம் கடும் துன்புறுத்தலுக்கும் தாக்குதலுக்கும் ஆளாகி வருவதாக தெரிவித்தார்.

இதன் பகுதியாக தனது மகள் தீ விபத்து ஒன்றில் கடுமையான காயமடைந்ததாகவும், கார் ஒன்று தன்னையும் தனது மனைவியையும் மோதியது என்றும் அதில் தனது மனைவியின் கரு சிதைந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் குடியரசுத் தலைவர் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறிய அவர் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் தனது மகளின் மருத்துவ செலவுக்கு மாருதி சுசுகி நிறுவனத்திடம் இருந்து ரூ.82 லட்சம் பெற்றுத் தர வேண்டும் என்றும் மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.

கடந்த மார்ச் 9 ஆம் தேதி மனு மீதான விசாரணையின்போது அந்த நபர் தனது மனைவியின் சிதைந்த உயிரற்ற கருவை நீதிமன்றத்திற்கு கொண்டு வந்து நீதிபதிகள் முன் வைத்தார்.

இதைக்கண்டு அதிர்ந்த நீதிபதி ஹிமான்ஷு ஜோஷி தலைமையிலான அமர்வு, இந்தச் செயலை மிகவும் ஆட்சேபனைக்குரியது என்று தெரிவித்தது.

மனுதாரருக்கு எதிராக ஆஜரான மாருதி சுசுகி மற்றும் அரசு தரப்பு வக்கீல், மனுதாரரின் முறைகேடு மற்றும் தாக்குதல் குற்றச்சாட்டுகள் ஆதரமற்றவை என்று தெரிவித்தார்.

தொடர்ந்து போதிய ஆதாரங்கள் இல்லாததால் மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், மனுதாரரின் இழப்புக்கு அனுதாபம் தெரிவிக்கும் அதே வேளையில், பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக நீதிமன்றத்தில் இதுபோன்று நடந்து கொள்ளக்கூடாது என்று கண்டிதனர்.

மனுதாரர் ஏற்கனவே இது தொடர்பாக இரண்டு முறை மனு தாக்கல் செய்து, பின்னர் அவற்றை வாபஸ் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com