இந்தியாவின் மூன்று முக்கிய எதிர்க் குரல்கள் தோல்வி - கேரளாவில் வென்றாலும் பலத்தை இழக்கும் காங்கிரஸ்

இந்தியாவை ஆளும்கட்சியான பாஜகவிற்கு முக்கிய எதிர்க்குரல்களாக இருந்த மூன்று கட்சிகள் இன்று தோற்கடிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் மூன்று முக்கிய எதிர்க் குரல்கள் தோல்வி - கேரளாவில் வென்றாலும் பலத்தை இழக்கும் காங்கிரஸ்
Published on

உலக வரைபடத்தில் இந்தியா ஒரு முக்கிய நாடு. இதற்கு உதாரணம் தற்போதும் உலகின் எந்தப் பகுதியில் போர் மூண்டாலும் அந்தப் போரில் இந்தியாவின் கருத்து என்பது மிக முக்கிய ஒன்றாக பார்க்கப்படுகிறது. காரணம் முந்தைய ஆட்சிகளில் உலக அமைதி, வன்முறையற்ற கொள்கை மற்றும் பிற நாடுகளுடன் சுமூகமான உறவைப் பேணுவதில் காட்டிய உறுதி.

ஆனால் இப்போது அந்த நடுநிலைத்தன்மை என்பது அறவே இல்லை. பாதிக்கப்படுபவர்கள் பக்கம் நிற்பதுதான் அறம் என்பதை ஒரு ஜனநாயக நாடு மறந்துநிற்கிறது. அதற்கு காரணம் அது தேர்ந்தெடுத்த தலைவர்.

மதச்சார்பற்ற நாடு, வேற்றுமையில் ஒற்றுமை, பன்முகத்தன்மை என்பவை கொஞ்சம், கொஞ்சமாக மாறி ஒரே கலாச்சாரம், ஒரே இனம், ஒரே மொழி என்னும் போர்வைக்குள் அடங்க முயற்சிகள் நடக்கிறது. இதன் தாக்கம்தான் சிறுபான்மை மக்களுக்கு எதிரான வன்முறைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம், ஒழுங்கு சீர்கேடு.

இவை அனைத்திற்கும் ஒரே காரணம் அரசியல் தெளிவு, அரசியல் புரிதல் என எதுவும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லாமை. அந்த அரசியல்வயப்படாமையின் தாக்கம் இன்று மூன்று முக்கிய மாநிலங்களில் எதிரொலித்துள்ளது. இன்று இந்தியாவின் 4 மாநிலங்களுக்கும், ஒரு யூனியன் பிரதேசத்திற்கும் சட்டசபை தேர்தலுக்கான முடிவுகள் வந்துள்ளன.

அதில் மூன்று மாநிலங்ளில் பாஜகவும், ஒன்றில் தவெகவும், ஒன்றில் காங்கிஸும் வெற்றிப் பெற்றுள்ளன. இது இக்கட்சிகளின் வெற்றி என்பதைத் தாண்டி மூன்று முக்கிய எதிர்க்கட்சிக் குரல்களில் தோல்வி என்றுதான் சொல்லவேண்டும். முதலமைச்சர்கள் பினராயி விஜயன், ஸ்டாலின், மம்தா பானர்ஜி ஆகியோர் தங்கள் தலைமையிலான ஆட்சியை இழக்கின்றனர்.

இதில் பெரும் அடி இந்தியாவில் எங்குமே கம்யூனிஸ்ட் ஆட்சி இல்லை என்பது. திரிபுரா, மேற்குவங்கத்தை தொடர்ந்து இன்று கேரளாவிலும் பொதுவுடைமைவாதிகள், சமத்துவவாதிகள் தோற்கடிக்கப்பட்டுள்ளனர்.

மறுபுறம் பாஜகவிற்கு முக்கிய சவால்களாக இருந்த திமுக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டுள்ளது. கேளராவில் காங்கிரஸ் வெற்றிப் பெற்றதாக அத்தலைமை நினைக்கலாம். ஆனால் அதுவும் தங்களுக்கான முக்கிய தோல்வி என்பதை எண்ணவேண்டும்.

தற்போது மேற்குவங்கத்தை சேர்த்து பாஜக நாட்டின் 22 மாநிலங்களில் நேரடியாகவோ, கூட்டணி வாயிலாகவோ ஆட்சியில் உள்ளது. மற்ற மாநிலங்களில் முழுவதும் காங்கிரஸ் ஆட்சியில் இல்லை. காங்கிரஸிற்கு ஆதரவு அளிக்கும், பாஜக கொள்கைகளுக்கு எதிரான சிந்தாந்தங்களை கொண்ட கட்சிகள் ஆட்சியில் இருந்தன.

அப்போது பாஜகவிற்கு எதிரான சிந்தாந்தம் கொண்ட கட்சிகள் தோற்கும்போது, அது காங்கிரஸ் விழும் பெரும் அடி, பாஜகவிற்கான பலம். ஏற்கனவே ஜனநாயகத்தின் முக்கியத் தூணான நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சிகளின் கேள்விகள் புறக்கணிக்கப்படுவதும், முறையான விவாதம் இன்றி சட்டங்கள் இயற்றப்படுவதும் வழக்கமாகி வருகிறது. உதாரணமாக திமுக மட்டும் இல்லையேல் இந்த தொகுதி மறுவரையறை மசோதா கூட நிறைவேற்றப்பட்டிருக்கும்.

காங்கிரஸ் - பாஜகவைத் தாண்டி முக்கிய கருத்தியல் கட்சிகள் தோல்வியடைந்துள்ளன என்பதே நிதர்சனம். ஒரு நாட்டில் ஒத்த குரல் ஒலிப்பது என்பது மிகவும் ஆபத்தான ஒரு நிலை. எப்போதும் ஒரு குரலுக்கு எதிரான குரல் வலுவாக இருக்கவேண்டும்.

எதிர்க்கட்சியான காங்கிரஸை தாண்டி பாஜகவிற்கு பயம் தரும் குரல்களாக இருந்தவை திமுக, திரிணாமுல் காங்கிரஸே. இப்போது அவை தோற்கடிக்கப்பட்டுள்ளன. அதாவது இந்தியாவின் மூன்று முக்கிய எதிர்க்குரல்கள் தோற்கடிக்கப்பட்டுள்ளன.

இதன் தாக்கம் அடுத்த ஐந்து வருடங்களில் நிச்சயம் எதிரொலிக்கும். எப்போதும் ஆளும்தரப்பைவிட, எதிர்தரப்பு வலிமையானதாக இருக்கவேண்டும். காரணம் அப்போதுதான் குறைந்தது ஆளும் தரப்பின் குற்றங்கள் கட்டுக்குள் இருக்கும்.

ஆனால் இங்கு எதிர்க்குரல்களே ஒடுக்கப்பட்டுள்ளன என்பது எவ்வளவு பெரிய துயரம் என்பதை மக்கள் உணரவில்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com