தீர்ப்பு நாள்: 823 சட்டமன்றத் தொகுதிகள்.. தலைவிதியை தீர்மானிக்கும் வாக்கு எண்ணிக்கை - முழு விவரம் | Election Results 2026

நடப்பு தேர்தலில் அங்கு 91.23 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
தீர்ப்பு நாள்: 823 சட்டமன்றத் தொகுதிகள்.. தலைவிதியை தீர்மானிக்கும் வாக்கு எண்ணிக்கை - முழு விவரம் | Election Results 2026
Published on

அசாம், புதுச்சேரி ஆகியவற்றுக்கு ஏப்ரல் 9 ஆம் தேதியும், தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் (முதல்கட்டம்) ஆகியவற்றுக்கு ஏப்ரல் 23 ஆம் தேதியும் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. மேற்கு வங்கத்துக்கு மட்டும் இரண்டாம் மற்றும் இறுதி கட்ட தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 29 நடைபெற்றது.

அனைத்து வாக்குகளும் இன்று (மே 4) எண்ணப்படுகின்றன. மொத்தம் 823 சட்டமன்றத் தொகுதிகளின் தலைவிதி இன்று தீர்மானிக்கப்படுகிறது. காலை 8 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.

தமிழகத்தில் 234 தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படும் நிலையில் திமுக, தவெக, அதிமுக இடையே போட்டி நிலவுகிறது.

வெவ்வேறு கருத்துக்கணிப்புகளில் மூன்று கட்சிகளுக்குமே வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளதால் குழப்பம் நீடிக்கிறது. நடப்பு தேர்தலில் தமிழகத்தில் 84 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கு மத்தியில் அனைவராலும் உற்று நோக்கப்படும் மேற்கு வங்கத்தில் மாநிலம் முழுவதும் 77 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

ஃபால்டா தொகுதியில் மே 21 அன்று மறுவாக்குப்பதிவு அறிவிக்கப்பட்டுள்ளதால், 294 இடங்களில் 293 இடங்களுக்கு மட்டுமே இன்று வாக்கு எண்ணிக்கை.

ஃபால்டா தேர்தல் முடிவுகள் மே 24 அன்று அறிவிக்கப்படும். மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆர் மூலம் 89 லட்சம் வாக்காளர் நீக்கப்பட்ட நிலையில் தேர்தல் முடிவுகளில் அதன் தாக்கம் ஆராயப்பட்டு வருகிறது.

மேற்கு வங்கத்தில், முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் பாஜகவே வெற்றி பெறும் என்று கணித்துள்ளன. நடப்பு தேர்தலில் அங்கு 86.9 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

அசாமில் மொத்தம் உள்ள 126 தொகுதிகளில் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜக கூட்டணி எளிதில் ஆட்சியைத் தக்கவைக்கும் என்று கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. நடப்பு தேர்தலில் அங்கு 75.95 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

140 இடங்களை கொண்ட கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான எல்டிஎஃப் தோற்கடிக்கப்பட்டு, காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் ஆட்சிக்கு வரக்கூடும் என்று கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. நடப்பு தேர்தலில் அங்கு 79.07 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

அதே நேரத்தில் 30 தொகுதிகள் கொண்ட புதுச்சேரியில் என்டிஏ கூட்டணிக்கு வெற்றிபெற வாய்ப்புள்ளது. நடப்பு தேர்தலில் அங்கு 91.23 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com