

தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்காளம் உள்பட 5 மாநிலங்களில் சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடந்தது. முன்னதாக இந்த மாநிலங்களில் வாக்காளர் பட்டி யல் சிறப்பு தீவிர திருத்தமும் நடந்தது.
இதனால் இந்த மாநிலங்களில் வரலாறு காணாத வாக்குப்பதிவு நடந்தது. அத்துடன் ஆண்களை விட அதிக எண்ணிக்கையில் பெண் வாக்காளர்கள் ஜனநாயக கடமையை ஆற்றி இருக்கின்றனர். இது தொடர்பான விவரங்களை தேர்தல் கமிஷன் தற்போது வெளியிட்டு உள்ளது.
அதன்படி மேற்கு வங்காளத்தில் 293 தொகுதிகளில் (பால்டாவை தவிர) 93.71 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. தபால் வாக்குகள் உள்பட 6.38 கோடிக்கும் அதிகமாளோர் வாக்களித்து உள்ளனர்.
இங்கு மொத்த வாக்காளர் எண்ணிக்கை 6.81 கோடி ஆகும். இதில் பெண்கள் 93.8 சதவீதமும், ஆண்கள் 92.06 சதவீதமும் ஓட்டுப்போட்டு உள்ளனர்.
சுமார் 5.74 கோடி வாக்காளர்கள் கொண்ட தமிழ்நாட்டில் 85.01 சதவீத (சுமார் 4.8 கோடி பேர்) வாக்குப்பதிவு நடந்துள்ளது. இங்கும் ஓட்டுப்போட்ட ஆண் வாக்காளர்கள் 83.77 சதவீதமாகவும், பெண் வாக்காளர்கள் 86.2 சதவீதமாகவும் உள்ளனர்.
கேரளமும் 2.12 கோடிக்கும் அதிகமானோர் வாக்களித்து 78.11 சதவீத வாக்குப்பதிவை கண்டிருந்தது. மாநிலத்தில் 74.9 சதவீத ஆண்கள் வாக்களித்த நிலையில், பெண்கள் 81.17 சதவீதத்தினர் ஓட்டுப்போட்டு முந்தி விட்டனர்.
புதுச்சேரியில் 89.82 சதவீத ஆண்கள், 91.39 சதவித பெண்கள் என 8.5 லட்சத்துக்கு அதிகமான வாக்காளர்கள் ஜனநாயக கடமையாற்றி இருக்கிறார்கள். அசாமில் நடந்த வாக்குப்பதிவு சதவீதம் 85.74-ஐ எட்டியது. பெண் வாக்காளர்கள் 86.53 சதவீதம். ஆண் வாக்காளர்கள் 84.95 சதவீதம் என 2.15 கோடிக்கும் அதிகமானோர் ஓட்டுப்போட்டு உள்ளனர்.
இவ்வாறு தேர்தலில் பெண்கள் அதிகம் ஒட்டுப்போட்டு இருந்தாலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை குறைவாகவே இருப்பதாக தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.
அதாவது தமிழ்நாட்டில் 23 பெண்கள் (9.83 சதவீதம்), மேற்கு வங்காளத்தில் 37 பேர் (12.62 சதவீதம்), கேரளம் 11 பேர் (7.85 சதவீதம்) மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். அதேநேரம் இந்த தேர்தலில் மூன்றாம் பாலினத்தை சேர்ந்த 2 பேர் (தமிழ்நாடு, கேரளத்தில் தலா ஒருவர்) மட்டுமே போட்டியிட்டு இருந்தனர். ஆனால் இருவரும் டெபாசிட் இழந்தது சோகமான உண்மை ஆகும்.
இந்த தகவல்களை தேர்தல் கமிஷன் வெளியிட்டு உள்ளது.