

தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்கு மத்தியில் தேர்தல் ஆணையம் சமூக ஊடகத்தில் பரப்பப்படும் திசைதிருப்பும் பதிவுகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.
கேரளம், அசாம், புதுச்சேரி ஆகியவற்றுக்கு கடந்த ஏப்ரல் 9 அன்று வாக்குபதிவு முடிந்த நிலையில் தமிழநாடு, மேற்கு வங்கம் ஆகியவற்றுக்கு ஏப்ரல் 23 வாக்குப்பதிவு நடக்கிறது. மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 29 இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. மே 6 தேதி வாக்குகள் எண்ணப்பட்டு 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகும்.
தோ்தல் காலகட்டத்தில் சட்டவிரோதமாகவும், செயற்கை நுண்ணறிவு மூலம் தவறாக சித்திரிக்கப்பட்டடும் வெளியாகும் உள்ளடக்கங்கள் கவனத்துக்கு கொண்டுவரப்பட்ட மூன்று மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தோ்தல் ஆணையம் சமூக ஊடகங்களுக்கு ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்தது.
இந்த சூழலில் கடந்த மார்ச் 15-ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து இதுவரை சுமார் 11,000 க்கும் மேற்பட்ட சட்டவிரோத சமூக ஊடகப் பதிவுகள் மற்றும் இணையதள முகவரிகள் (URL) கண்டறியப்பட்டு அவை நீக்கப்பட்டுள்ளன என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பதிவுகளை நீக்குவதோடு மட்டுமல்லாது, வழக்குப்பதிவு செய்தல், விளக்கம் கோருதல், மறுப்பு தெரிவித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக கூறியுள்ளது.