என் மலர்tooltip icon

    இந்தியா

    கர்நாடக மாநில காங்கிரசின் கோஷ்டி பிரிவால் அமலாக்கத்துறை சோதனை: மத்திய மந்திரி
    X

    கர்நாடக மாநில காங்கிரசின் கோஷ்டி பிரிவால் அமலாக்கத்துறை சோதனை: மத்திய மந்திரி

    • பரமேஷ்வரா தொடர்புடைய 16 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை.
    • ரன்யா ராவ் தங்கம் கடத்தல் வழக்கில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை.

    கர்நாடக மாநில நடிகையான ரன்யா ராவ், தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார். இவர் வெளிநாட்டில் இருந்து பலமுறை தங்கம் கடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்தது. தங்கம் கடத்தப்பட்ட வழக்கில் சட்ட விரோதமாக பண பரிவர்த்தனை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    கர்நாடக மாநில போலீஸ் துறை (Home Minister) அமைச்சரான பரமேஷ்வரா தொடர்புடைய கல்வி நிறுவனம், ரன்யா ராவின் 40 லட்சம் ரூபாய் கிரெடிட் கார்டு பில்லை செலுத்தியிருந்தது. இது அமலாக்கத்துறைக்கு சந்தேகத்தை எழுப்பியது. இது தொடர்பாக பரமேஷ்வரா தொடர்புடைய பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை கடந்த இரண்டு நாட்களாக 16 இடங்களில் சோதனை நடத்தியது.

    இந்த சோதனை தொடர்பாக கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் கூறுகையில் "அரசியல்வாதிகளாகிய நாங்கள் திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிக்கு செல்கிறோம். சிலர் அறக்கட்டளை வைத்திருக்கிறார்கள். பரமேஷ்வரா 10 முதல் 15 லட்சம் வரை கொடுத்திருக்கலாம். அவர் தூய்மையானவர், நேர்மையானவர்" என ஆதரவு தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் பரமேஷ்வரா தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்த கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சிக்குள் உள்ள கோஷ்டி பிரிவுதான் காரணம் என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பிரகலாத் ஜோஷி கூறியதாவது:-

    அவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என அமலாக்கத்துறைக்கு கடிதம் எழுதியது யார்?. காங்கிரஸ் கட்சியின் கோஷ்டி பிரிவினர் காரணமாக, அமலாக்கத்துறைக்கு அனைத்து தகவலும் அனுப்பப்பட்டுள்ளது. இப்போது அவர்கள் இங்கே ஒரு நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள்.

    பரமேஸ்வராவை நான் மதிக்கிறேன் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். அவர் ஒரு பண்பட்ட அரசியல்வாதி. விஷயம் என்னவென்றால், புகார்கள் வந்ததால் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. காங்கிரஸ் கட்சிக்குள் ஒரு பிரிவினர் அமலாக்கத்துறையிடம் புகார் அளித்தனர்.

    Next Story
    ×