

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள உகாண்டாவில் கடந்த மே மாதம் எபோலா நோய்த் தொற்று பரவ ஆரம்பித்து, சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து கடந்த மே 17 அன்று உலக சுகாதார அமைப்பு எபோலா நோய்த்தொற்று பரவலை பொது சுகாதார அவசர நிலையாக அறிவித்தது.
இந்நிலையில் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம், டெல்லி சர்வதேச விமான நிலையத்துடன் இணைந்து ‘ஏர் சுவிதா 2.0’ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த மேம்படுத்தப்பட்ட இணையதளம், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சுகாதார சேவைகள் பொது இயக்குநரகத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.
அனைத்து சர்வதேச பயண வழித்தடத்திலும் பொது சுகாதார கண்காணிப்பை வலுப்படுத்தும் வகையில் டிஜிட்டல் முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
காங்கோ, உகாண்டா மற்றும் தெற்கு சூடான் போன்ற எபோலா பாதிப்புள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகள், தங்களின் சுயஅறிவிப்பு படிவத்தை ஆன்லைனில் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த இணையதளம் மூலம், இந்தியாவிற்குள் நுழையும் பயணிகள் தங்களின் 21 நாள் பயண வரலாறு மற்றும் சுகாதார அறிவிப்புகளை சமர்ப்பிக்க வேண்டும்.
இதன்மூலம் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களை உடனடியாக அடையாளம் கண்டு, 21 நாட்களுக்கு கண்காணிக்க சுகாதார நல அமைச்சகம் முடிவு செய்துள்ளது.