அவர் என்னை போன்றவர்-பிரதமர் மோடியின் சுறுசுறுப்பைக் கண்டு வியந்த டொனால்டு டிரம்ப்!

அதிபர் டிரம்ப் மற்ற உலகத் தலைவர்களுக்குக் கொடுக்காத ஒரு தனித்துவமான மரியாதையை மோடிக்கு வழங்குகிறார்.
Donald Trump amazed by PM Modi
Published on

வாஷிங்டனில் நடைபெற்ற அமெரிக்க-இந்திய உத்திசார் கூட்டாண்மை உச்சி மாநாட்டில் இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் இரு நாட்டுத் தலைவர்களின் நட்பு குறித்து சுவாரசியமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு புளோரிடாவின் மியாமியில் நடைபெற்ற உடற்கல்வி மற்றும் தற்காப்புக் கலை நிகழ்ச்சி ஒன்றின் பின்னணியில் அதிபர் டொனால்டு டிரம்ப் இருந்தபோது, திடீரென இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைத் தொடர்பு கொள்ளுமாறு தூதர் செர்ஜியோ கோரிடம் கேட்டுள்ளார்.

அதற்கு செர்ஜியோ கோர், "இப்போது இந்தியாவில் காலை 6 மணி ஆகிறது" என்று கூறி அதிகாலையில் அழைப்பதற்கு சற்று தயங்கியுள்ளார்.

அதற்குப் பதிலளித்த அதிபர் டிரம்ப், "பிரதமர் மோடி இந்நேரம் தூங்கிக் கொண்டிருக்க மாட்டார். அவர் என்னை போன்றவர், அவருக்குத் தூக்கம் வராது; எப்போதுமே அதிகாலையிலேயே எழுந்துவிடுவார்" என்று கூறி மோடியின் சுறுசுறுப்பையும் உழைப்பையும் பாராட்டியுள்ளார்.

டிரம்ப் உடனடியாக மேடைக்குச் செல்ல வேண்டியிருந்ததால் அந்த அழைப்பு மறுநாளுக்கு மாற்றப்பட்டாலும், இந்த நிகழ்வு இரு தலைவர்களுக்கும் இடையே உள்ள நெருக்கமான தனிப்பட்ட பிணைப்பைக் காட்டுவதாக செர்ஜியோ கோர் குறிப்பிட்டுள்ளார்.

அதிபர் டிரம்ப் பிரதமர் மோடியை ஒரு சிறந்த நண்பராகக் கருதுகிறார் என்றும், மற்ற உலகத் தலைவர்களுக்குக் கொடுக்காத ஒரு தனித்துவமான மரியாதையை மோடிக்கு அவர் வழங்குகிறார் என்றும் தூதர் தெரிவித்தார்.

மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக இலக்கை அடுத்த சில ஆண்டுகளில் 500 பில்லியன் டாலராக உயர்த்துவதில் இரு அரசுகளும் தீவிரமாக கவனம் செலுத்தி வருவதாகவும், வரும் டிசம்பர் மாதத்தில் பிரதமர் மோடி அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாகவும் இந்த மாநாட்டின் மூலம் தெரியவந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com