

இந்தியா உலகின் மிகப்பெரிய பருத்தி உற்பத்தியாளர்களில் ஒன்றாக இருந்தாலும், ஆடம்பர ஆடைகள் மற்றும் உயர்தர நூல்களைத் தயாரிக்கப் பயன்படும் நீள இழை பருத்தி போதிய அளவில் விளைவதில்லை. இதற்காக எகிப்து மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளை இந்தியா நம்பியுள்ளது. பருத்தி அறுவடை அக்டோபர்-நவம்பரில் தொடங்கி மார்ச் மாதத்துடன் முடிந்துவிடும்.
ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் உள்நாட்டு சந்தையில் பருத்தி இருப்பு குறைந்து, விலை கடுமையாக உயரும். உள்நாட்டுப் பருத்தி வியாபாரிகள் செயற்கையாக விலையை உயர்த்தும்போது, இறக்குமதி பருத்தி அந்த விலையைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, உள்நாட்டு ஜவுளித் துறையை மேம்படுத்த பருத்தி இறக்குமதி மீதான அனைத்து சுங்க வரிகளும் 3 மாதங்களுக்கு முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, இந்த தற்காலிக வரிவிலக்கு நாளை (திங்கட்கிழமை) முதல் அக்டோபர் 31-ந்தேதி வரை அமலில் இருக்கும்.
இதன்மூலம் பருத்தி இறக்குமதிக்கான 11 சதவீதம் அடிப்படை சுங்க வரி மற்றும் வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வரி ஆகிய இரண்டும் முழு மையாக நீக்கப்பட்டுள்ளன.
தற்போதைய ஈரான் போர்ச் சூழலால் சர்வதேச அளவில் வினியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள மூலப்பொருள் பற்றாக்குறையைப் போக்கி, உள்நாட்டு ஜவுளித் தொழிலுக்குப் போதிய பருத்தி கிடைப்பதை உறுதி செய்ய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தற்காலிக விலக்கு நூல், துணி மற்றும் ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் சிறு மற்றும் நடுத்தர ஜவுளி ஆலைகளின் உற்பத்திச் செலவைக் கணிசமாகக் குறைக்கும்.
இறக்குமதி வரி நீக்கப்பட்டாலும், இந்திய பருத்திக் கழகம் வழங்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை மூலம் உள்நாட்டுப் பருத்தி விவசாயிகளின் நுகர்வு மற்றும் வருவாய் தேவைகள் தொடர்ந்து பாதுகாக்கப்படும் என அமைச்சகம் உறுதி அளித்துள்ளது.