

கேரள சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) மொத்தம் உள்ள 140 இடங்களில் 99 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
ஆட்சி அமைக்க 71 இடங்கள் தேவைப்படும் நிலையில் 91 என்ற அறுதிப் பெரும்பான்மையுடன் யுடிஎப் ஆட்சி அமைக்கிறது.
2016, 2021 தேர்தல்களில் வென்று 10 ஆண்டுகள் அங்கு ஆட்சி செலுத்திய பினராயி விஜயன் தலைமையிலான இடது முன்னணி கூட்டணி நடப்பு தேர்தலில் 35 இடங்களில் வென்று எதிர்க்கட்சி ஆகியுள்ளது. முதல்முறையாக பாஜக 3 இடங்களில் வென்றுள்ளது. மூன்றுமே திருவனந்தபுரத்தில் உள்ள தொகுதிகள் ஆகும்.
இந்நிலையில் மாநிலத்தில் அமையவுள்ள காங்கிரசின் யுடிஎப் அரசை வழிநடத்த உள்ள முதலமைச்சர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அதன்படி முதல்வர் ரேஸில் மூன்று பெயர்கள் அடிபடுகின்றன.
ரமேஷ் சென்னிதலா (69): காங்கிரஸ் மூத்த தலைவர், முன்னாள் உள்துறை அமைச்சர். நீண்ட அரசியல் அனுபவம், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு மற்றும் செல்வாக்கு கொண்டவர்.
கே.சி. வேணுகோபால் (63): அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர். ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கமானவர், கட்சியை ஒருங்கிணைப்பதில் முக்கிய புள்ளி இவர்.
வி.டி. சதீசன் (62): எதிர்க்கட்சித் தலைவர். பினராயி விஜயனை நேருக்கு நேர் எதிர்த்தவர், இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றவர்.
கேரளாவில் இருந்து காங்கிரசின் தேசிய முகமாக அறியப்படும் திருவானந்தபுர எம்.பி. சசி தரூர் முதல்வராவார் என்ற எதிர்பார்ப்பு தேசிய ஊடகங்களில் நிலவியபோதும் கேரளாவில் கள எதார்த்தம், கட்சியில் அவருக்கு இருக்கும் எதிர்ப்பலை அந்த வாய்ப்பை மங்கச் செய்துள்ளதாக கருதப்படுகிறது.