கோவில் தங்கத்தை பணமாக்க மத்திய அரசு திட்டமா? நிதி அமைச்சகம் விளக்கம்

தங்கத்தை பணமாக்கும் அல்லது கோவில் தங்கத்தை இந்தியாவின் உத்திசார் தங்க இருப்புகளாக கருதப்படும் என்ற செய்தி உண்மையில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கோவில் தங்கத்தை பணமாக்க மத்திய அரசு திட்டமா? நிதி அமைச்சகம் விளக்கம்
Published on

அமெரிக்கா- ஈரான் இடையிலான போர் காரணமாக உலகளாவிய பொருளாதாரம் ஸ்திரதன்மையற்ற நிலையில் உள்ளது. அமெரிக்கா- ஈரான் இடையிலான ஹார்முஸ் ஜலசந்தி காரணமாக கச்சா எண்ணெய் போக்குவரத்து தடைபட்டுள்ளது. இதனால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது.

உலகளவிலான அந்நிய செலாவணி பணப்பரிமாற்ற சந்தையில் டாலருக்கான மதிப்பு நிலையாக உயர்ந்து வருகிறது. அதேவேளையில் டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவை இழந்து வருகிறது.

ஒரு நாட்டின் பண மதிப்பு அதன் அந்நிய செலாவணி கையிருப்பு மற்றும் தங்கம் ஆகியவற்றை கொண்டு மதிப்பிடப்படுகிறது. வெளிநாட்டில் இருந்து எந்தவொரு பொருட்களை இறக்குமதி செய்தாலும், அதை டாலரில்தான் வர்த்தகம் செய்யப்படுகிறது. இதனால் நம்மிடம் பணம் கையிருப்பு அதிகமாக இருக்க வேண்டும். டாலருக்கு இணையாக இந்திய ரூபாயின் பண மதிப்பு வீழ்ச்சி அடைந்தால், மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்படும்.

இதனைத் தொடர்ந்து இந்திய பிரதமர் மோடி, தங்கம் வாங்க வேண்டும் என்றும், வெளிநாட்டு பயணத்தை தவிர்க்க வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு அறிவுத்தியிருந்தார். இதற்கிடையே கோவில் அறக்கட்டளை மற்றும் எந்தவொரு மதம் சார்ந்த அமைப்புகளிடம் இருக்கும் தங்கத்தை பணமாக்க (பாண்டு பத்திரம்) மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

பெரும்பாலான இந்து கோவில்கள் அறக்கட்டளையின் கீழ் செயல்பட்டு வருகிறது. அந்த அறக்கட்டளையில் கோவில்களுக்கு காணிக்கையாக செலுத்தப்படும் தங்கங்கள் சேமித்து வைக்கப்படும். இதுபோன்ற தங்கத்தை மத்திய அரசு குறிவைக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில், மத்திய நிதியமைச்சகம் இது முற்றிலும் தவறான செய்தி. மத்திய அரசுக்கு அவ்வாறு எந்த நோக்கமும் இல்லை என விளக்கம் அளித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள கோவில் அறக்கட்டளைகள் அல்லது பிற சமய நிறுவனங்களிடம் உள்ள தங்கத்தைப் பணமாக்கும் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகக் கூறும் யூகங்களும் வதந்திகளும் முற்றிலும் பொய்யானவை, திசைதிருப்பக்கூடியவை மற்றும் எவ்வித அடிப்படை ஆதாரமும் அற்றவை ஆகும்.

கோவில் கோபுரங்கள், கதவுகள் அல்லது பிற கோவில் கட்டமைப்புகளில் பதிக்கப்பட்டுள்ள தங்கத் தகடுகள், "இந்தியாவின் உத்திசார் தங்க இருப்புகளாக" (Strategic Gold Reserves of India) கருதப்படும் என்று கூறும் கூற்றுகளும் பொய்யானவை, திசைதிருப்பக்கூடியவை மற்றும் முற்றிலும் அடிப்படை ஆதாரமற்றவை என்று தெளிவுபடுத்தப்படுகிறது.

இத்தகைய வதந்திகளை நம்பவோ அல்லது பரப்பவோ வேண்டாம் என்று குடிமக்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்புவது தேவையற்ற குழப்பங்களை உருவாக்குவதுடன், பொதுமக்களைத் திசைதிருப்பவும் கூடும்.

அங்கீகரிக்கப்பட்ட வழிகள் வாயிலாக வெளியிடப்படும் அதிகாரப்பூர்வத் தகவல்களை மட்டுமே நம்புமாறு அரசு அனைத்துக் குடிமக்களையும் வலியுறுத்துகிறது. கொள்கை முடிவுகள் அல்லது அரசுத் திட்டங்கள் தொடர்பான எந்தவொரு தகவலும், அதிகாரப்பூர்வப் பத்திரிக்கை வெளியீடுகள், அரசு இணையதளங்கள் மற்றும் சரிபார்க்கப்பட்ட பொதுத் தொடர்புத் தளங்கள் வாயிலாகவே பகிரப்படும் என அந்த விளக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com