மக்கள் மத்திய அரசின் அடிமைகளா?... எதிர்த்து போராடினால் வழக்குப் பதிவீர்களா? - மும்பை உயர்நீதிமன்றம் காட்டம்

மனுதாரர் 'பாஜக அரசு ஒழிக', 'அமித் ஷா ஒழிக' என்றுதானே முழக்கமிட்டுள்ளார்.
போராட்டம்
போராட்டம்
Published on

இந்திய குடிமக்கள் அனைவரும் இந்திய அரசாங்கத்தின் அடிமைகளாக்கப்படுகிறார்களா? என மும்பை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சயீத் அகமது

சோசலிஸ்ட் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா அமைப்பின் மகாராஷ்டிர மாநிலப் பொதுச்செயலாளர் சயீத் அகமது அப்துல் சவுத்ரி (49) தாக்கல் செய்த மனுவை விசாரித்த தனி நீதிபதி மாதவ் ஜாம்தார் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்டவற்றில் மத்திய அரசை எதிர்த்து நடத்திய போராட்டங்களுக்காக சயீத் அகமது சவுத்ரிக்கு எதிராக மும்பை போலீசார் 4 எப்ஐஆர்களை பதிவு செய்திருந்தனர்.

இதைக் காரணமாகக் காட்டி, மும்பை காவல்துறை துணை ஆணையர் கடந்த 2025 டிசம்பர் 3 அன்று சயீத் அகமதுவை மும்பைக்குள் நுழையக் கூடாது என ஓராண்டு காலத்திற்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து கடந்த 2026 மார்ச் 27 அன்று கொங்கண் மண்டல ஆணையரும் மீண்டும் அதே உத்தரவை பிறப்பித்தார்.

இந்த உத்தரவுகளை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் சயீத் தாக்கல் செய்த மனு நேற்று மும்பை உயர்நீதிமன்ற தனி நீதிபதி மாதவ் ஜாம்தார் முன் விசாரணைக்கு வந்தது.

நீதி

மும்பை காவல்துறையின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடிய நீதிபதி மாதவ்,

"என்ன நடக்கிறது இங்கே? இந்திய குடிமக்கள் அனைவரும் இந்திய அரசாங்கத்தின் அடிமைகளாக்கப்படுகிறார்களா?

அவர்களால் போராட்டங்களோ, ஆர்ப்பாட்டங்களோ நடத்த முடியாதா? இப்போது கூட பல்வேறு வினாத்தாள்கள் கசிந்துள்ளன.

மக்கள் அதற்கு எதிராகப் போராடினால், நீங்கள் வழக்குகளைப் பதிவு செய்வீர்களா? போராடுவது குடிமக்களின் உரிமை.

மனுதாரர் 'பாஜக அரசு ஒழிக', 'அமித் ஷா ஒழிக' என்றுதானே முழக்கமிட்டுள்ளார்.

குடிமக்கள் ஏன் இத்தகைய முழக்கங்களை எழுப்பக் கூடாது? இவற்றுக்கெல்லாம் மாநிலத்துக்குள் நுழைய கூடாது என உத்தரவு போடுவதா?"

காவல்துறையினர் ஒன்றும் நாட்டின் பிரதமருக்கோ அல்லது மாநில முதலமைச்சருக்கோ வேலை செய்யும் ஊழியர்கள் அல்ல. அவர்கள் பொது மக்களின் ஊழியர்கள்" என காட்டமாக தெரிவித்தார்.

மேலும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 19 மற்றும் 21 ஆகிய பிரிவுகளின்படி, குடிமக்களுக்கு தங்களது கருத்துக்களை வெளிப்படுத்த சுதந்திரம் இருப்பது மட்டுமன்றி, கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமையும் உள்ளது.

அரசின் முடிவுகளை எதிர்த்ததற்காக மனுதாரர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை முற்றிலும் உள்நோக்கம் கொண்டது.

இதன் அடிப்படையில் சயீத் அகமதுவுக்கு எதிராகப் பிறப்பித்திருந்த உத்தரவுகளை முற்றிலும் ரத்து செய்வதாக உத்தரவிட்டார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com