

நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படும் நபர்களுக்கு அளிக்கப்படும் கீமோதெரபி சிகிச்சைக்கு மாற்றாக, புதிய வகை நோய் எதிர்ப்பு மருந்தான டெசென்ட்ரிக் எனப்படும் அட்சோலிசுமாப் மருந்தை, இந்தியாவின் ரோச் பார்மா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இந்த மருந்து பொதுவாக தொடைப் பகுதியிலும் தோலுக்கு அடியிலும் நேராக செலுத்தப்படுகிறது. இந்த மருந்து செலுத்துவதற்கு ஏழு நிமிடங்கள் மட்டுமே ஆகும்.
இந்த மருந்து நோய் எதிர்ப்பு மண்டலத்தில் மறைந்து இருக்கும் PD-L1 எனப்படும் புரதத்தை தடுக்கிறது. இதன்மூலம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு செல்கள், புற்று நோய் செல்களை திறம்பட அடையாளம் கண்டு தாக்கி அழிக்க உதவுகிறது.
ஒரு டோஸ் மருந்தின் விலை ரூ. 3.7 லட்சம் எனவும், மேலும் புற்றுநோய் சிகிச்சையின்போது 6 டோஸ்கள் வரை தேவைப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த புதிய முறை சிகிச்சை நோயாளிகள் மற்றும் மருத்துவமனையின் சுமையைக் குறைக்கும். இருப்பினும் இந்த சிகிச்சையின் மிக அதிக விலை, பாமர மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.