Assemebly election | கேரளா, புதுச்சேரி, அசாமில் இன்று மாலையுடன் நிறைவு: தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரம்

கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
Assemebly election | கேரளா, புதுச்சேரி, அசாமில் இன்று மாலையுடன் நிறைவு: தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரம்
Published on

தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்குவங்கம் ஆகிய 5 மாநிலங்களில் இந்த மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது.

இந்நிலையில், புதுச்சேரி, கேரளம் மற்றும் அசாம் மாநிலங்களில் நாளை மறுநாள் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் முடிவடைகிறது.

அசாமில் உள்ள 126 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நாளை மறுதினம் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு பா.ஜ.க. முதல் மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான கூட்டணி களம் காண்கிறது. பா.ஜ.க.வை எதிர்த்து கவுரவ் கோகாய் தலைமையிலான காங்கிரஸ், அகில் கோகாய் தலைமையிலான ராய்ஜோர் தளம் உள்ளிட்ட 15 கட்சிகள் இணைந்த எதிர்க்கட்சி கூட்டணி போட்டியிடுகிறது. அசாமில் மொத்தம் 789 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. முதல் மந்திரி ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக , அதிமுக மற்றும் எல்.ஜே.கே ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. இவர்களை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி போட்டியிடுகிறது. இந்த தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சிகளும் போட்டியிடுகின்றன. புதுச்சேரியில் 366 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இங்கு முதல் மந்திரி பினராயி விஜயன் தலைமையில் சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய எல்.டி.எப் கூட்டணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எப் கூட்டணி இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இவர்களுடன் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் மும்முனை போட்டியை அளிக்கிறது. கேரளாவில் மொத்தம் 985 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

கேரளத்தில் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த அனல் பறக்கும் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு தொகுதி எம்.பி. பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்பட தேசியத் தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

மேற்கண்ட 3 மாநிலங்களில் மொத்தமுள்ள 296 எம்.எல்.ஏ.க்கள் பதவிக்கு 2,140 பேர் போட்டியிடுகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com