

மேற்கு வங்கம் மாநிலத்தில் மொத்தம் 294 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் கடந்த 23-ந்தேதி 152 தொகுதிகளுக்கு முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது சில அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்றாலும் மறுவாக்குப்பதிவு நடத்தும் வகையில் எந்த சம்பவங்களும் நடைபெறவில்லை.
ஆனால் கடந்த மாதம் 29-ந்தேதி 152 தொகுதிகளுக்கு நடைபெற்ற 2-வது கட்ட தேர்தலின்போது பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவை சீர்குலைக்கும் வகையிலான சம்பவங்கள் நடைபெற்றது. ஃபால்டா தொகுதியில் வாக்கு இயந்திரத்தில் பாஜக சின்னம் டேப் ஒட்டி மறைக்கப்பட்டது.
இதற்கிடையே நேற்று இரண்டு தொகுதிகளில் உள்ள 15 வாக்குச் சாவடிகளுக்கு நேற்று மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. அதேவேளையில் ஃபால்டா தொகுதி முழுவதும் நடைபெற்ற வாக்குப்பதிவு செல்லாது என அறிவித்த தேர்தல் ஆணையம், வருகிற 21-ந்தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என அறிவித்துள்ளது.
இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில் "ஃபால்டா, மே 21. செலவைப் பற்றி கவலைப்பட வேண்டாம். உங்களிடம் இருப்பதை அனைத்தையும் கொண்டு வாருங்கள். உங்களுக்குத் துணிச்சல் இருந்தால், நரேந்திர மோடி, அமித் ஷா, யோகி ஆதித்ய நாத் என நீங்களே நேரில் வாருங்கள். 50,000 மத்திய படை வீரர்களைக் களமிறக்குங்கள். ஒவ்வொரு வாக்குச்சாவடியை சுற்றிலும் கவச வாகனங்களை நிறுத்துங்கள். உங்கள் வசம் உள்ள ஒவ்வொரு 'சிங்கம்' அதிகாரியையும் விமானம் மூலம் வரவழையுங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் மத்திய படைகளை குவித்து பாஜக-வுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்று மம்தா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இந்த நிலையில்தான் மறுவாக்குப் பதிவின் போது இவர்களை குவித்து வெற்றி பெற்று காட்டுங்கள் பார்ப்போம் என்ற வகையில் சவால் விட்டுள்ளது.