

விரைவு கோர்ட்டுகள் அமைப்பதற்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நிலுவையில் இருக்கும் பயங்கரவாதம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான வழக்குகளின் விவரங்களை சுப்ரீம் கோர்ட்டு கேட்டுள்ளது.
பயங்கரவாதம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (உபா) கீழ் பதிவாகும் வழக்குகளை தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) விசாரித்து வருகிறது. இதற்காக சிறப்பு கோர்ட்டுகளும் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்த என்.ஐ.ஏ. விசாரணையில் இருக்கும் பல வழக்குகள் பல ஆண்டுகளாக நிலுவையில் இருப்பதாக கவலையும், குற்றச்சாட்டும் எழுந்தன.
இதனால் இந்த விவகாரத்தை சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜோய்மால்யா பாக்சி ஆகியோரை கொண்ட அமர்வில் இந்த விசாரணை நடந்து வருகிறது.
இந்த விசாரணையில் டெல்லி, மராட்டியம், குஜராத், பீகார், காஷ்மீர், தமிழ்நாடு, கேரளம், கர்நாடகா உள்பட 17 மாநிலங்களில் தலா 10-க்கும் மேற்பட்ட என்.ஐ.ஏ. விசாரிக்கும் வழக்குகள் பல ஆண்டுகளாக நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
அதேநேரம் இந்த வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் பிற வழக்குகளையும் கையாளுவதால் அவர்களுக்கு அதிக பணிச்சுமை இருப்பதும் தெரியவந்தது. உபா உள்ளிட்ட பயங்கரவாதம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் வேறு வழக்குகளை விசாரிக்கக்கூடாது என்றபோதும் பிற வழக்குகளையும் அவர்கள் விசாரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது.
எனவே பயங்கரவாதம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க விரைவு கோர்ட்டுகள் அமைக்க முடிவு செய்துள்ளது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, மேற்படி 17 மாநிலங்களிலும் என்.ஐ.ஏ. அல்லது மாநில போலீசாரால் விசாரிக்கப்படும் பயங்கரவாத வழக்குகள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படும் நிலுவையில் இருக்கும் வழக்குகளின் விவரங்களை தாக்கல் செய்யுமாறு அந்தந்த மாநில வக்கீல் ஜெனரல்களிடம் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
மேலும் விரைவு கோர்ட்டுகள் அமைக்க ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்துக்கும் ரூ.1 கோடி வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பட்டியிடம் அறிவுறுத்தினர்.
அத்துடன் மீதமுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் மேற்படி விவரங்களை தாக்கல் செய்யவும் அறிவுறுத்தப்பட்டது.
இதைப்போல இந்த கோர்ட்டுகளின் சீரான செயல்பாட்டை உறுதி செய்வதற்காக ஆண்டுதோறும் ரூ.1 கோடி விடுவிப்பது குறித்து பரிசீலிக்கவும் கேட்டுக்கொண்டனர்.
இந்த வழக்குகளில் வழங்கப்படும் விரைவான தீர்ப்புதான் குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் ஆகிய இரு தரப்பினரின் உரிமைகளையும் சமநிலைப்படுத்தும் எனவும் நீதிபதிகள் கூறினர்.
பின்னர் இந்த வழக்கின் அடுத்த விசாரணையை அடுத்த மாதம் (மே) 8-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.