

அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கான நன்கொடைகள் திருடப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கோடை விடுமுறை முடிந்தவுடன் இந்த மனு விசாரிக்கப்படும் என்றும் இந்த விஷயத்தில் என்ன அவசரம், வானம் ஒன்றும் இடிந்து விழுந்துவிடாது என்று நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் மற்றும் ஷீல் நாகு ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது.
முன்னதாக மனுதாரரின் வழக்கறிஞர், குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை என்று வாதிட்டார். மாநில அரசு செயல்படும் விதம் குறித்தும் அவர் சந்தேகங்களை வெளிப்படுத்தினார்.
இருப்பினும், உடனடி விசாரணைக்கு அமர்வு ஒப்புக்கொள்ளவில்லை.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கோயில்களில் நன்கொடைகளை நிர்வகிப்பதற்கான குறைந்தபட்ச வழிகாட்டுதல்களை வகுக்குமாறும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
இதனிடையே நன்கொடை முறைகேடு வழக்கில் மாநில அரசின் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது.
திருட்டில் ஈடுட்டதாக கைது செய்யப்பட்ட கோவில் ஊழியர்கள் உள்ளிட்ட எட்டு பேரின் வீடுகளில் காவல்துறையினர் சோதனை நடத்தினர்.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரின் வீட்டிலிருந்து நகைகள் மற்றும் பல ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அறக்கட்டளை உறுப்பினர் ஒருவரின் புகாரை அடுத்து இந்த முறைகேடு வெளிச்சத்துக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.