

தெலுங்கானா மாநிலம் மேடக் நகர் ராணுவ குடியிருப்பை சேர்ந்தவர் பொன்னம் குமார் கவுட் (வயது 49). ராணுவ வீரர். இவரது மனைவி பத்மா. பொன்னம் குமார் கவுட் உத்தரகாண்டில் வேலை செய்து வந்தார்.
ஒரு மாதத்திற்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு மனைவிக்கும் ராணுவ வீரருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் பத்மா கணவரிடம் கோபித்துக் கொண்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றார்.
மனைவி தாய் வீட்டிற்கு சென்றதால் பொன்னம் குமார் கவுட் 2 பெண்களை வீட்டிற்கு அழைத்து வந்து உல்லாசமாக இருந்தார். அக்கம் பக்கத்தினர் இது குறித்து பத்மாவுக்கு தகவல் தெரிவித்தனர். இதனைக் கேட்டு ஆத்திரம் அடைந்த பத்மா தனது தந்தை, தாய் மற்றும் சகோதரருடன் கணவர் வீட்டுக்கு வந்தார்.
பெண்களுடன் உல்லாசமாக இருந்தது குறித்து கேட்டபோது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பத்மா அவரது தந்தை, தாய் மற்றும் சகோதரர் சேர்ந்து பொன்னம்குமார் கவுட்டை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த ராணுவ வீரர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
ஆத்திரத்தில் கணவரை அடித்துக் கொலை செய்து விட்டோமே என பத்மா கதறி துடித்தார். அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.