

ஓமன் நாட்டில் இருந்து இந்தியா நோக்கி வந்து கொண்டிருந்த இந்திய சரக்கு கப்பல், தொழில்நுட்ப கோளாறால் கடலின் நடுவே நின்றதை தொடர்ந்து, கப்பலில் தவித்த இந்தியர்களை பாகிஸ்தான் கடற்படை மீட்டுள்ளனர்.
6 இந்தியர்கள் மற்றும் 1 இந்தோனேசிய குழுவுடன் வந்த எம்.வி.கெளதம் இந்திய சரக்கு கப்பல், அரபிக்கடல் பகுதிக்கு வந்தபோது, திடீரென தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து பாகிஸ்தான் கடற்படையிடம் உதவி கேட்கப்பட்டதை தொடர்ந்து, மருத்துவ உதவி, உணவு மற்றும் தொழில்நுட்ப உதவிகளை, கப்பலில் தவித்த இந்திய குழுவிற்கு கடற்படை அதிகாரிகள் வழங்கியுள்ளனர்.
இதுகுறித்து தெரிவித்துள்ள இந்திய கடற்படை, ஜெனரேட்டரில் ஏற்பட்ட கோளாறில், கப்பலுக்கு செல்லும் மின்சாரம் முழுவதுமாக துண்டிக்கப்பட்டு, பாகிஸ்தான் கடற்பரப்பில் கப்பல் நின்றுள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் உதவி கேட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதத்தில் இதேபோன்று 18 குழுவுடன் சென்ற சரக்கு கப்பல் அரபிக்கடல் தத்தளித்த போது, பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகளால் மீட்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.