

மேற்கு வங்க மாநிலத்தில் நேற்று 152 தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் இதுவரை இல்லாத அளவிற்கு 92.70 சதவீத வாக்குகள் பதிவாகின. மக்கள் ஆட்சி மாற்றம் வேண்டும் என்ற உற்சாகத்துடன் முதற்கட்ட தேர்தலில் வரலாற்று சாதனை நிகழ்த்தும் வகையில் திரண்டு வந்து வாக்கு அளித்துள்ளனர். பாஜக 110 இடங்களில் வெற்றி பெறும் என அமித் ஷா பேசியிருந்தார்.
இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. தெரீக் ஓ'பிரைன் பதில் அளித்துள்ளார். வாக்குப்பதிவு குறித்து ஓ“பிரைன் கூறியதாவது:-
2021-ல் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 3.67 கோடி. 3.1 கோடி வாக்குகள் பதிவாகியிருந்தன. இது 84 சதவீதம் வாக்குகள் ஆகும்.
2026-ல் SIR-க்குப் பிறகு மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 3.33 கோடியாக குறைந்தது. பதிவான வாக்குகள் 3.09 கோடி ஆகும். இது 92.70 சதவீதம் ஆகும்.
இதன் அர்த்தம், 92.70 சதவீதம் வாக்குகள் தற்போது பதிவாகியிருந்தாலும், 2021-ஐ காட்டிலும் 83,674 வாக்குகள் குறைவு. 2021-ஐ விட தற்போது அதிக வாக்கு சதவீதத்திற்கு உண்மையிலேயே SIR மூலம் அதிகமான வாக்குகள் நீக்கப்பட்டதுதான் காரணம்.
மே 4-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற பின், உங்களுடைய கட்டுக்கதையை அம்பலப்படுத்துவது எளிதானது.
இவ்வாறு தெரீக் ஓ'பிரைன் தெரிவித்துள்ளார்.